தமிழ்நாடு

சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின்வேலி: பரிதாபமாக உயிரிழந்த காட்டு யானை

webteam

விவசாய நிலத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி ஆண் காட்டு யானை ஒன்று பரிதாபமாக உயிரிழந்தது.

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த மோடிகுப்பம் அருகே குடிமிப்பட்டியைச் சேர்ந்தவர் விவசாயி பிச்சாண்டி. இவர் பயிர் செய்யும் குத்தகை நிலத்துக்கு வன விலங்குகள் அடிக்கடி வந்து பயிர்களை சேதம் செய்து வந்துள்ளன. இதனால் ஆத்திரமடைந்த பிச்சாண்டி, வனவிலங்குகள் வருவதை தடுக்க சட்ட விரோதமாக மின்வேலி அமைத்துள்ளார்.

இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு அந்த மின்வேலியில் சிக்கி காட்டுயானை ஒன்று இறந்துள்ளது. காலையில் இறந்து கிடந்த யானையை பார்த்த அந்த நிலத்தின் குத்தகையாளர் யாருக்கும் தெரியாமல் அதன் மீது தென்னை ஓலைகளை போட்டு மூடி வைத்துள்ளார். பின்னர், நேற்று மாலை அந்தப்பகுதியில் ஜெசிபி எந்திரம் மூலம் யானையை அவர் புதைத்துள்ளார்.

இந்த தகவல் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம், மாவட்ட வன அலுவலர் பார்கவ்தேஜா ஆகியோருக்கு தெரியவந்துள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க அவர்கள் வனத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற வனத்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் யானை புதைக்கப்பட்ட இடத்தை தோண்டி யானையின் உடலை வெளியே எடுத்து கால்நடை மருத்துவரால் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அதே இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த வனத்துறை மற்றும் காவல்துறையினர் ஜேசிபி இயந்திரத்தை பறிமுதல் செய்து, பிச்சாண்டி உள்ளிட்ட 3 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.