தமிழ்நாடு

சின்னத்தம்பியை கும்கியாக மாற்றுவது சரியா? - வன ஆர்வலர் கருத்து

சின்னத்தம்பியை கும்கியாக மாற்றுவது சரியா? - வன ஆர்வலர் கருத்து

Rasus

காட்டு யானை சின்னத்தம்பியை பலருக்கும் தெரியும். அந்தளவுக்கு இந்த யானை செய்திகளில் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது. கோவை மாவட்டம் பெரியதடாகம் ‌வனப்பகுதியில் விவசாய நிலங்களை சேதப்படுத்துவதாக யானை சின்னத்தம்பி மீது தொடர்ச்சியாக புகார்கள் எழுந்தன. இதனையடுத்து சின்னத் தம்பியை மயக்க ஊசி செலுத்தி பிடித்த காவல்துறையினர் அதனை டாப்சிலிப் வனப்பகுதிக்குள் விட்டனர். ஆனால் இரண்டே நாட்களில் வனப்பகுதியை விட்டு மீண்டும் ஊருக்குள் புகுந்தது சின்னத்தம்பி.

தற்போது 3 நாட்களில் மட்டும் 100 கி.மீ தூரத்தை கடந்துள்ள சின்னத் தம்பி தற்போது உடுமலை அருகே தஞ்சமடைந்துள்ளது. தொலைந்துபோன தன் குடும்பத்தை சின்னத் தம்பி தேடுவதாக சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதேசமயம் தற்போது காட்டுக்குள் விரட்ட முடியாத காரணத்தினால் சின்னத்தம்பி யானை கும்மியாக மாற்றப்படும் என வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார். கும்கியாக மாற்றப்படும் என்ற நடவடிக்கை சரிதானா..? என்பது குறித்த விவரங்களை அறிய வன ஆர்வலர் ராமமூர்த்தி அவர்களிடம் பேசினோம்.

அவர், “மனிதனின் பேராசைதான் இந்தப் பிரச்னைக்கு முக்கிய காரணம். சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்பு சமவெளிக் காடுகள் எங்கிலும் யானைகள் இருந்தன. நாடு முழுவதும் காடுகளாக இருந்தது. அந்தக் காடுகளுக்கு இடையில்தான் மனிதன் வாழ்ந்து வந்தான். மனிதன் நாளைக்கு நமக்கு இது தேவை என்று எங்கு யோசிக்க ஆரம்பித்தானோ அங்குதான் அனைத்து பிரச்னைகளும் ஆரம்பமானது. தொழிற்புரட்சி, விவசாய புரட்சி, பசுமைப் புரட்சி எனக் கடந்த நூற்றாண்டுகளில் காடுகளை பற்றிய புரிதலே இல்லாமல் அவற்றை அழிக்க ஆரம்பித்துவிட்டோம்.

2012-ல் இருந்த யானைகள் எண்ணிக்கையை விட தற்போது யானைகளின் எண்ணிக்கையில் பெரிய அளவில் வேற்றுமை இருக்கிறது. அதாவது ஆண்டுதோறும் யானைகளின் எண்ணிக்கை குறைந்துகொண்டேதான் செல்கிறது. யானைகள் அதிகமாக இருக்கும்போது பிரச்னைகள் இல்லை. ஆனால் இப்போது யானைகள் குறைவாகத் தான் இருக்கிறது. அப்படியென்றால் பிரச்னை எங்கு இருக்கிறது. மனிதன் அதிகரித்து விட்டான். யானைகளின் இருப்பிடத்தை அவன் ஆக்கிரமிக்க படையெடுக்க ஆரம்பித்துவிட்டான். 

மலையை அழித்து தோட்டப் பயிர்களாக மாற்றிவிட்டோம். குடியிருப்புகள் மட்டுமின்றி, தேயிலை தோட்டங்கள், வழிபாட்டுத் தலங்கள் என அனைத்திற்காகவும் காடுகளை ஆக்கிமிரத்து விட்டோம். தேயிலைத் தோட்டங்களால் இன்று ஆறுகள் குறைந்துவிட்டன. மழைக்காடுகளை அழித்துதான் இன்று தேயிலைத் தோட்டங்களை உருவாக்கியுள்ளனர். மழைக்காடுகளின் தன்மையே, மழை அதிகமாக பெய்யும்போது அதனை ஸ்பாஞ்ச் போன்று ஈர்த்து வைத்து கொள்வதும், தேவையான நேரங்களில் அதனை வெளியேற்றும். ஆனால் இன்று மழைக்காடுகளே அழிக்கப்பட்டு விட்டன. 

ஊருக்குள் மனிதர்கள் பிரச்னை செய்கிறார்கள் என்று அவர்களை நாடு கடத்தினால் ஏற்றுக்கொள்வார்களா..? நம்மால் அங்குசென்றுதான் வாழ முடியுமா..? யானையின் மூதாதையர்கள் எங்கு வாழ்ந்தார்களோ அங்குதான் அது வாழ்ந்துக் கொண்டிருக்கிறது. அதற்கென்று ஒரு குடும்பம் இருக்கிறது. உறவும் இருக்கிறது. அனைத்தையும் தொலைத்துவிட்டு அது மட்டும் வேறு இடத்தில் எப்படி வாழ முடியும்..? 

மனிதர்கள் மட்டும்தான் இங்கு உயிர்களா..? அனைத்தும் உயிர்கள் தானே..? நாம் பிற உயிர்களை மதிப்பதில்லை. பிற உயிர்கள் இல்லாமல் நம்மால் வாழ முடியாது என்று நினைப்பதில்லை. நமக்கு பயன்படக் கூடிய விலங்குகள் மட்டும் இருந்தால் போதும் என்று நாம் நினைக்கிறாம். உண்மையில் அப்படியில்லை. காட்டுவாழ் உயிரினங்களை அழிப்பதன்மூலம் நமக்கு நாமே குழி தோண்டுகிறோம். அதுவே உண்மை.

ஒருநாளைக்கு எத்தனையோ கழிவுகளை, நச்சுகளை நாம் வெளியேற்றிக் கொண்டிருக்கிறோம். இதனையெல்லாம் சரிசெய்யக் கூடிய, காடுகளை, விலங்குகளை நாம் மெதுமெதுவாக அழித்துக் கொண்டிருக்கிறோம். வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் இத்தனை ஆக்கிரமிப்புகள் அந்தக் காலங்களில் கிடையாது. இதற்கெல்லாம் அரசாங்கமும் அனுமதி கொடுக்கிறது. வனப்பகுதியில் செங்கல் சூளைகளுக்காக, ஏரி அளவில் மண் அள்ளி வைத்துள்ளார்கள். இதெல்லாம் ஒரு காரணம்தான்.

யானைக்கு சராசரியாக ஒரு நாளைக்கு 200 முதல் 250 கிலோ அளவிலான உணவுகள் தேவை. 150 லிட்டர் தண்ணீராவது வேண்டும். யானையின் குணாதிசயமே ஒரே இடத்தில் இல்லாமல் நகர்ந்து செல்வதுதான். இந்தப் பகுதியில் தண்ணீர் இல்லை. நாம் அடுத்த இடத்திற்கு மாறுவோம் என வனவிலங்குகள் மாறிக் கொண்டேயிருக்கும். அவற்றிற்கு இது மனித இடம் அப்படியெல்லாம் தெரியாது. மலையையும் ஆக்கிரமித்து விட்டோம். கீழே நிலங்களையும் ஆக்கிரமித்துவிட்டோம். இடையில் சரிவில் மட்டும்தான் வாழ வேண்டிய நிலையில் விலங்குகளை நாம் நிர்பந்திக்கிறோம். இது தவறானது.

கும்கியாக மாற்றலாமா..?

சக யானையை விரட்ட, பிடிக்கத்தான் கும்கி யானைகளாக மாற்றுகின்றனர். எல்லா யானைகளையும் கும்கியாகவும் மாற்றிவிடவும் முடியாது. அதற்கான உடல் வலிமை, அமைப்பு இருந்தால் தான் கும்கி யானைகளாக மாற்ற முடியும். ஏற்கெனவே இருக்கின்ற யானைகளை பார்த்துக்கொள்ளவே பாகன்கள் இல்லாத நிலையில் உள்ளனர்.

சின்னதம்பியை மீண்டும் காட்டிற்குள் விடுவதே ஆரோக்கியமான சூழல்.. அது யானைக்கும் நல்லது. நமக்கும் நல்லது. எந்தவொரு விலங்குகளையும் அடைத்து வைப்பது இயற்கைக்கு விரோதமான செயல். இயற்கை வளங்களை பாதுகாக்க ஆட்சியாளர்கள் முன்வர வேண்டும். 

இந்திரா காந்தி ஆட்சிக்காலத்தில் வனத்துறை மீது அக்கறையாக இருந்தார். தற்போது உள்ளவர்கள் வனத்தை லாப நோக்கத்தில் மட்டும் பார்க்காமல், அதனை முறையாக பார்க்க வேண்டும். யானை வழித்தடத்தை சரியான முறையில் கண்டுபிடித்து, அது வருவாய் தரும் பகுதியாக இருந்தாலும் கூட அதனை மாற்றி யானைகள் வாழ்வதற்கான சூழ்நிலையை உருவாக்க வேண்டும்” எனத் தெரிவித்தார். 

இவர் பேச்சுக்குப் பிறகு உங்களுக்கு ஒன்று தெளிவாக புரியும். யானை நம் நிலங்களில் புகவில்லை. நாம்தான் அவற்றின் நிலத்தை அபகரித்து வைத்துள்ளோம்.