சின்னதம்பி யானை முகாமிட்டிருந்த புதரை அகற்றி, அதனை காட்டுக்குள் விரட்ட வனத்துறை தீவரமாக முயற்சி செய்து வருகின்றனர்.
கோவை மாவட்டத்திலுள்ள பெரியதடாகம் வனப்பகுதியில் விவசாய நிலங்களை சின்னதம்பி என்ற காட்டுயானை சேதப்படுத்துவதாக விவசாயிகள் புகார் தெரிவித்ததையடுத்து பெரிய போராட்டத்துக்கு பிறகு சின்னதம்பியை மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் பிடித்தனர். பின் வாகனம் மூலம் ஆனைமலை புலிகள் காப்பகத்திலுள்ள டாப்சிலிப் வனப்பகுதிக்கு சின்னத்தம்பி யானை கொண்டு செல்லப்பட்டது.
மேலும் சின்னதம்பி யானையின் இருப்பிடத்தை அறிய அதன் உடலில் ஜிபிஎஸ் கருவி பொருத்தியிருந்தனர். ஆனால் டாப்சிலிப் பகுதியில் விடப்பட்ட சின்னதம்பி யானை இரண்டு நாட்களுக்குள் மீண்டும் ஊருக்குள் வந்தது.
இந்நிலையில் உடுமலைப்பேட்டை அருகேயுள்ள கிருஷ்ணாபுரத்தில் தொடர்ந்து நான்காவது நாளாக முகாமிட்டுள்ள சின்னதம்பியை காட்டுக்குள் விரட்ட வனத்துறை தீவிரம் காட்டி வருகின்றனர். இதனால் கடந்த 3 நாட்களாக சின்னதம்பி ஓய்வெடுத்த புதர் தற்போது அழிக்கப்பட்டுள்ளது. மேலும், அங்கு தேங்கியிருந்த சர்க்கரை ஆலை கழிவு நீர் வெளியேற்றப்பட்டு மண் கொட்டி மூடப்பட்டதுள்ளது.
சின்னதம்பியை அதன் போக்கிலேயே வனப்பகுதிக்கு கொண்டு செல்லவும் வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர். மேலும் சின்னதம்பியை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் திட்டம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.