தேன்கனிக்கோட்டை அருகே 30 வயது மதிக்கத்தக்க பெண் யானை ஒன்று குட்டியுடன் உயிரிழந்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அடுத்த பெல்லட்டி வனப்பகுதியில் பிரசவத்தின்போது எதிர்பாராத விதமாக 30 வயது மதிக்கத்தக்க பெண் யானை ஒன்று குட்டியை ஈன்றெடுக்க முடியாமல் பரிதாபமாக குட்டியுடன் உயிரிழந்தது. இந்த நிலையில் இன்று காலை வனப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வனக் காவலர்கள் யானை உயிரிழந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்து உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்த மாவட்ட அலுவலர் கார்த்திகேயனி தலைமையிலான வனத்துறையினர் மற்றும் மருத்துவக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்த யானையின் உடலை மீட்டு அங்கேயே பிரேத பரிசோதனை மேற்கொண்டனர். மேலும் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். யானை உயிரிழந்த சம்பவம் வன விலங்கு ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.