தமிழ்நாடு

கஜா புயல் தாக்கி ஒரு மாதமாகியும் மீள முடியாமல் தவிக்கும் கிராமங்கள்

கஜா புயல் தாக்கி ஒரு மாதமாகியும் மீள முடியாமல் தவிக்கும் கிராமங்கள்

webteam

கஜா தாக்கி 30 நாட்களாகி விட்டன நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் இன்னும் கிராமப்புற பகுதிகளுக்கு முழுமையாக மின்சாரம் விநியோகிக்கப்படவில்லை எனப் புகார் எழுந்துள்ளது. 

கஜா புயலால் நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. சில நகர்ப்புறங்களிலும், பல கிராமப்புறங்களிலும் மின் இணைப்பு முழுமையாக சரி செய்யும் பணிக்கள் நடைப்பெற்று வருகிறது. கஜா புயலால் ஏற்பட்ட சேதங்கள் அதிகமாக உள்ளதால் சீரமைப்பு பணிகள் அதிதீவிரமாக நடைப்பெற தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது.

இந்நிலையில் கஜா புயல் வீசிச்சென்று ஒரு மாதத்தை கடந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் இன்னும் கிராமப்புற பகுதிகளுக்கு முழுமையாக மின்சாரம் விநியோகிக்கப்படவில்லை எனப் புகார் எழுந்துள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி, கோட்டூர், மன்னார்குடி ஒன்றிய பகுதிகளில் பெரும்பாலான கிராமங்களுக்கு இன்னும் மின்சார விநியோகம் வழங்கப்படவில்லை. திருவாரூர் மாவட்டத்தில் கஜா புயல் தாக்கிய முதல் வாரத்தில் வெளி மாவட்டங்களிலிருந்து வந்திருந்த மின் வாரிய தொழிலாளர்கள் 15 நாட்கள் அயராது உழைத்ததன் காரணமாக நகரப் பகுதிகள் முழுமையான மின்சாரம் பெற்று நிலைமை சீரடைந்ததைப் போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் கிராம மக்களின் துயர நிலை வெளிப்படவில்லை. நகர்பகுதிகளில் 100 சதவிகித மின்சாரம் வழங்கப்பட்டு‌ள்ள நிலையில் உட்புற கிராமங்களில் இன்னும் குடிநீர், மின்சார பிரச்னை நீடிக்கிறது. 

மேலும் நூற்றுக்கணக்கான கிராமங்களுக்கு மின்சாரம் இன்றி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கு நீரேற்ற முடியாமல் குடிநீர் வினியோகமும் நடைபெறவில்லை. ஜெனரேட்டர்கள் பயன்படுத்தி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் தண்ணீர் ஏற்றுவதற்கு அரசு ஏற்பாடு செய்தாலும், அதனை நிர்வகிப்பதில் ஏற்படும் பெரும் சிரமங்கள் காரணமாக உரிய நேரத்துக்கு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் தண்ணீர் ஏற்றாமல் மக்களுக்கு குறைந்த அளவே தண்ணீர் வழங்கப்படுகிறது.

புயல் தாக்கிய பகுதிகளில் உள்ள வீடுகள் அனைத்தும் தற்போது பல நிறங்களில் சமூக ஆர்வலர்களால் வழங்கப்பட்ட பாலித்தீன் தார்ப்பாய்களே சேதமடைந்த வீடுகளை பாதுகாத்து வருகின்றன. அவற்றை மாற்றிவிட்டு கீற்றுகள் அல்லது ஓடுகள் போடுவதற்கு பொருளாதார வசதி இன்றி பொதுமக்கள் ஒருபுறத்தில் தவிக்கின்றனர். சிலர் கீற்றுகளை மாற்ற நினைத்தாலும் கீற்றுகள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பாலித்தீன் தார்ப்பாய் வெயிலில் காய்ந்து வீணாகி வருகின்றன.

மின்சாரம் இன்றி மாணவர்கள் படிப்பதற்கும் பெரும் சிரமப்படுகின்றனர். மக்களிடத்தில் பணப்புழக்கம் இல்லாததால் பெட்டிக் கடைகள் முதல் பெரிய நிறுவனங்கள் வரை வியாபாரம் இன்றி வர்த்தகர்களும் சோர்ந்து போய்விட்டனர். இந்த நிலையில்தான் ஆங்காங்கே பொதுமக்கள் அரசிடம் நிவாரணம் கேட்டு சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இயல்புநிலை விரைவாக திரும்ப வேண்டுமெனில் மின்சாரத்தை விரைவாக கொடுக்க அரசு இன்னும் அதிக அளவு மின்வாரிய தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்த வேண்டும். விரைவாக நிவாரண உதவிகளை வழங்குவதற்கு உரிய வகையில் கணக்கெடுப்பு பணியை விரைவுபடுத்த வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது. 

கஜா புயல் பாதிப்பு விபரம்:
கால்நடைகள்      - 767
குடிசைகள் சேதம்  - 1,5,077
ஓட்டு வீடுகள் சேதம் - 25652
மின்கம்பங்கள் சேதம் - 48,928
கிராமப்புறங்களில் 50 சதவிகிதம் மட்டுமே மின் விநியோகம் நடைபெறுகிறது.

மரங்கள் விழுந்தது      - 1,84460.
மரங்கள் அகற்றப்பட்டது  - 1,84460.
மனித உயிரிழப்பு - 12
9,17,807 தென்னை மரங்கள் சேதமடைந்துள்ளன.
2322 ஏக்கர் நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளது.
பனை எண்ணை மரங்கள் 138 ஏக்கர் சேதமடைந்துள்ளது. 
189 ஏக்கர் கரும்பு சேதமடைந்துள்ளது.