நகர்புறங்களில் 2 நாட்களிலும், கிராமப்புறங்களில் 7 நாட்களிலும் மின் இணைப்பு முழுமையாக வழங்கப்படும் என்று தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார்.
‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் பகுதியில் தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் மற்றும் தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி இருவரும் இரு சக்கர வாகனத்தில் சென்று மக்களின் குறைகளை கேட்டறிந்தனர். பின்னர் செய்தியாளரிடம் பேசிய அமைச்சர் தங்கமணி “புயல் பாதித்த பகுதிகளில் சுமார் 1 லட்சம் மின் கம்பங்கள், 861 மின் மாற்றிகள், 261 துணை மின் நிலையங்கள் பதிக்கப்பட்டுள்ளன. இதனை சரிசெய்யும் பணியில் 21 ஆயிரத்து 461 மின் வாரிய பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்” எனத் தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து பேசிய அமைச்சர் தஞ்சை மாவட்டத்தில் 98 சதவீதமும், நாகை மாவட்டத்தில் 95 சதவீதமும், திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் 50 சதவீதமும் மின் சீரமைக்கும் பணிக்கள் நிறைவடைந்துள்ளதாக தெரிவித்தார். நகர் புறங்களில் 2 நாட்களிலும், கிராமப்புறங்களில் 7 நாட்களில் மின் இணைப்பு முழுமையாக வழங்கப்படும் என்றும் அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.
மேலும் புயல் பாதித்த பகுதிகளில் தண்ணீர் பற்றாக்குறையை தண்ணீர் லாரிகளை கொண்டு பூர்த்தி செய்யப்பட்டு வருவதால் தூண்டுதலின் பேரில் தண்ணீர் கேட்டு பொதுமக்கள் சிலர் போராட்டம் நடத்தி வருவதாக தெரிவித்தார். மழையினால் ஹெலிகாப்டர் இறங்க ஏதுவான சூழல் இல்லாத காரணத்தால் முதல்வர் திரும்பி சென்றதாகவும் விரைவில் புயல் பாதித்த இடங்களை பார்வையிட முதல்வர் வருவர் என்றும் அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.