தமிழ்நாட்டில் இன்னும் ஒருசில தினங்களில் மின் தடை என்ற பேச்சுக்கே இடமிருக்காது என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதியளித்துள்ளார்.
சென்னை - அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ஆய்வு நடத்திய அமைச்சர் செந்தில்பாலாஜி, பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, மின் உற்பத்திக்காக 2 மாதங்களின் நிலக்கரி தேவைக்காக மட்டும் டெண்டர் விடப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.
மத்திய தொகுப்பிலிருந்து மின்சாரமும் நிலக்கரியும் வந்து சேராததே பிரச்னைக்கு காரணம் என்று செந்தில் பாலாஜி விளக்கமளித்தார். மின்வெட்டு குறித்த புகார்களை 94987 94987 என்ற 24 மணி நேர சேவை எண்ணில் தெரிவித்தால் உடனடியாக தீர்த்து வைக்கப்படும் என்றும், தற்போது இந்த எண்ணில் வரும் புகார்கள் 99 சதவிகிதம் நிறைவேற்றப்பட்டு வருவதாகவும் கூறினார்.
மின்தடை குறித்து பாஜக மாநிலத்தலைவர் மக்களிடம் தவறான கருத்துகளை கூறி மலிவான விளம்பரத்தை தேடி வருவதாகவும் அமைச்சர் குற்றம்சாட்டினார். நமக்கான மின்சாரத்தை நாமே உற்பத்தி செய்ய வேண்டும் என்பதே தமிழ்நாட்டின் இலக்காக உள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
இதையும் படிக்கலாம்: தமிழகத்தில் மின்வெட்டு ஏன்? - பேரவையில் அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கம்