தமிழகத்தில் 3 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான இடங்கள் காலியாக இருக்கும் நிலையில் ஒரு இடத்திற்கு மட்டும் வரும் 13-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அதிமுக மாநிலங்களவை உறுப்பினராக இருந்த முகமது ஜான் மரணமடைந்ததை அடுத்து அந்த இடம் காலியாக உள்ளது என்றும், அந்த இடத்திற்கு வரும் 13ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் வேட்புமனு தாக்கல் செய்யவேண்டும் எனத் தெரிவித்துள்ள தேர்தல் ஆணையம், செப்டம்பர் 3-ஆம் தேதிக்குள் வேட்புமனுவை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என்றும் கூறியுள்ளது. வரும்13-ஆம் தேதி கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி காலை 9 மணி முதல் மாலை 4 மணிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என தமிழக தலைமைச் செயலாளருக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 13-ஆம் தேதி மாலை 5 மணிக்கு வாக்குகள் எண்ணப்படும்.
மூன்று மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான இடங்கள் காலியாக இருக்கும் நிலையில், இவற்றுக்கு தனித்தனியாக தேர்தல் நடத்த வேண்டும் திமுக கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.