Election flying squad pt desk
தமிழ்நாடு

விருதுநகர்: வாகன சோதனையில் சிக்கிய ரூ.1.32 கோடி - பறிமுதல் செய்து தேர்தல் பறக்கும் படை அதிரடி!

ராஜபாளையத்தில் நடந்த வாகன தணிக்கையின் போது உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.1.32 கோடியை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

webteam

செய்தியாளர்: கருப்பஞானியார்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில், தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் நேற்று மாலை தென்காசி சாலையில் உள்ள சொக்கநாதன் புத்தூரில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் ஆண்டாள் தலைமையிலான குழுவினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

Election flying squad

அப்போது அந்த வழியாக வந்த தனியார் வங்கி வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 1 கோடியே 32 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் நடத்திய விசாரணையில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இருந்து, தென்காசி மாவட்டம் ஆலங்குளத்திற்கு பணத்தை கொண்டு செல்வதாக தனியார் வங்கி அலுவலர் சேதுராமசாமி கூறியுள்ளார்.

சோதனையின் போது உரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படை அதிகாரிகள், வட்டாட்சியர் ஜெயபாண்டியிடம் ஒப்படைத்தனர். இதைத் தொடர்ந்து பணப் பெட்டிகளை அரசு சார்நிலைக் கருவூலத்தில் பத்திரப்படுத்திய அதிகாரிகள், பறிமுதல் செய்யப்பட்ட பணம் 10 லட்சத்திற்கும் அதிகமாக இருப்பதால், வருமான வரித்துறை விசாரணைக்கு அனுப்ப உள்ளதாக தெரிவித்தனர்.