தேர்தல் ஆணையம்
தேர்தல் ஆணையம் முகநூல்
தமிழ்நாடு

“பரப்புரை ஓய்ந்தபின் சமூகவலைதளம் மூலம் வாக்கு சேகரித்தால் 2 ஆண்டு சிறை” - எச்சரித்த தேர்தல் ஆணையம்

PT WEB

தமிழகத்தில் இன்று மாலை 6 மணியுடன் மக்களவை தேர்தலுக்கான பரப்புரை நிறைவடைய உள்ள நிலையில், கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

பரப்புரை

அதன்படி, ”தேர்தல் தொடர்பான பொதுக்கூட்டத்தையோ, ஊர்வலத்தையோ யாரும் ஒருங்கிணைக்கவோ, நடத்தவோ அல்லது அவற்றில் பங்கேற்கவோ கூடாது. எந்தவொரு தேர்தல் விவகாரத்தையும், திரைப்படம், தொலைக்காட்சி, எஃப்எம், ரேடியோ, வாட்ஸ்அப், முகநூல், ட்விட்டடர் போன்றவற்றின் மூலம் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கக்கூடாது.

அதேபோல், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் தேர்தல் தொடர்பாக பரப்புரை செய்யக்கூடாது. மீறினால் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி 2 ஆண்டுகள் சிறை அல்லது அபராதம் அல்லது இவையிரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.

தொகுதி வெளியேயிருந்து அழைத்துவரப்பட்ட அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகள், கட்சி பணியாளர்கள் உள்ளிட்டோர் மாலை 6 மணிக்கு மேல் அந்த தொகுதியை விட்டு வெளியேற வேண்டும்.

தேர்தல் ஆணையம்

கல்யாண மண்டபம், சமுதாயக்கூடம், தங்கும் விடுதிகள், விருந்தினர் இல்லம் ஆகிய இடங்களில் வெளியாட்கள் யாரேனும் தங்கியுள்ளனரா என்பது கண்டறியப்படும். வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்ட நட்சத்திர பேச்சாளர்கள் உட்பட வாகன அனுமதிகள் மாலை 6 மணி முதல் செயல்திறனற்றதாகிவிடும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.