அன்புமணி ராமதாஸ் web
தமிழ்நாடு

‘மாம்பழ சின்னத்தை முடக்க முடியாது..’ நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதில்!

தேர்தல் நடைமுறை தொடங்கி விட்டதால் பாமகவின் சின்னமான மாம்பழத்தை முடக்கி வைக்க முடியாது என்று சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Rishan Vengai

ராமதாஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணையில், மாம்பழ சின்னத்தை முடக்க முடியாது என தேர்தல் ஆணையம் தெரிவித்தது. அன்புமணி ராமதாஸ் தலைவராக தேர்வு செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாகவும், தேர்தல் ஆணையம் சின்னத்தை ஒதுக்க ஆர்வம் காட்டியது ஏன் என புரியவில்லை என்றும் ராமதாஸ் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

பா.ம.க. தலைவராக தன்னை அங்கீகரிக்க வேண்டும், உட்கட்சி பிரச்னை தொடர்பான உரிமையியல் வழக்கில் தீர்வு எட்டப்படும் வரை, மாம்பழம் சின்னத்தை முடக்கி வைக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ராமதாஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

அன்புமணி - ராமதாஸ்

இந்த உத்தரவை எதிர்த்து ராமதாஸ் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், மாம்பழம் சின்னம் தொடர்பாக சென்னை உரிமையியல் நீதிமன்றம் விசாரித்து மூன்று நாட்களுக்குள் உத்தரவிடவேண்டும் என தெரிவித்தது.

அதன்படி வழக்கின் விசாரணை சென்னை 12வது கூடுதல் உரிமையியல் நீதிமன்ற நீதிபதி தர்மபிரபு முன் இன்று விசாரணைக்கு வந்தது.

அன்புமணி எப்படி தலைவராக முடியும்..?

அப்போது ராமதாஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர் எஸ் பிரபாகரன் ஆஜராகி, அன்புமணி ராமதாஸ் தலைவராக தேர்வு செய்யப்பட்ட பின்பு தான் பாமக கட்சிக்கான அங்கீகாரமே ரத்தானதாகவும், 2025-28 வரை மீண்டும் அன்புமணியை தலைவராக தேர்ந்தெடுக்க சிறப்பு நிர்வாக குழு எதிர்ப்பு தெரிவித்தது எனவும், தேர்தல் ஆணையத்துக்கும் அன்புமணி மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கப் படவில்லை என தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

மேலும் அன்புமணி ராமதாஸ் கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டதால், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாகவும் சுட்டிக்காட்டினார். ஆனால் மீண்டும் தலைவராக தேர்வு செய்யப்பட்டதாக ஆவணங்களை மோசடியாக தயாரித்து அன்புமணி தேர்தல் ஆணையத்தை ஏமாற்றி உள்ளதாகவும், இதுகுறித்து ஐந்து முறை தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ் அனுப்பி தெரிவிக்கப்பட்டதாகவும், ஆனால் அன்புமணிக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு என்ன இவ்வளவு ஆர்வம் என தெரியவில்லை எனவும் வாதங்களை முன்வைத்தார்.

ராமதாஸ் - அன்புமணி மோதல்

திநகரில் உள்ளது அன்புமணியின் வீடு, ஆனால் அதை பாமக அலுவலகமாக தேர்தல் ஆணையம் எப்படி கருதியது. அன்புமணியின் பதவிகாலம் முடிந்தும், தேர்தல் ஆணையம் எப்படி அன்புமணியை தலைவராக ஏற்றது என தெரியவில்லை என வாதிட்டார். அவர் தேர்தலில் போட்டியிடட்டும், நாங்களும் போட்டியிடுகிறோம் மக்கள் முடிவு செய்யுட்டும் என வாதிட்டார்.

பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.எல்.ராஜா, இந்த மனு தாக்கல் செய்யப்பட்ட முறையே தவறானது என குறிப்பிட்டார். ராமதாஸ் தலைவராக உள்ளார் என்றால் ஏன் தன்னை தலைவராக அறிவிக்க வேண்டும் என வழக்கு தொடர்ந்துள்ளார் எனவும் வாதிட்டார்.

சின்னத்தை முடக்க முடியாது..

தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபால், இந்த வழக்கு தந்தை-மகனுக்கு இடையே உள்ள பிரச்சனை, மாம்பழ சின்னத்தை தற்போதைய நிலையில் முடக்க முடியாது, தேர்தல் நடைமுறை தொடங்கிவிட்டதால் நீதிமன்றம் தலையிட்டு உத்தரவு தெரிவிக்க முடியாது என்றும், புதுவையில் சின்னம் ஒதுக்கப்பட்டு விட்டது என்றும் வாதிட்டார்.

அன்புமணி தரப்பில் மூத்த வழக்கறிஞர் சித்ரா சம்பத் ஆஜராகி, நிறுவனர் ராமதாஸை சிலர் தவறாக வழி நடத்துகின்றனர், இது தந்தை மகனுக்கு இடையேயான பிரச்சனை மட்டுமே, ஆனால் அதை வைத்து சிலர் அரசியல் செய்கின்றனர் என தெரிவித்தார்.

பாமக பதிவு செய்யப்பட்ட கட்சியாக இருப்பதால் மாம்பழம் சின்னம் வேறு யாருக்கும் சென்று விட கூடாது என்பதற்காக சின்னம் பெறப்பட்டதாகவும், பாமகவுக்கு மாம்பழம் கிடைத்திருக்க கூடாது என்பதை தான் ராமதாஸ் விரும்புகிறாரா? எனவும், அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக இருந்ததால் விதிகளின் படி மாம்பழம் சின்னம் யாருக்கும் ஒதுக்கப்படாது என்றாலும், இந்த முறை சின்னம் கிடைக்காமல் தேர்தலில் நின்றால் வாக்காளர்களுக்கு குழப்பம் ஏற்படும் என வாதிட்டார்.

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம்

2025 ஆகஸ்ட் மாதம் சிறப்பு பொதுக்குழு நடத்தப்பட்டு ராமதாஸ் செயல் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதாக கூறுவது போலியானது. பொதுக்குழு நடத்தப்படும் என 21 நாட்களுக்கு முன் நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுத்து அதன் பின் பொதுக்குழு கூட்டப்பட வேண்டும். அப்படி கூட்டப்பட்டதற்கான ஆதாரங்கள், ஆவணங்கள் இல்லை.

பழைய முகவரியை மாற்ற வேண்டும் என ராமதாஸ் தெரிவிப்பதில் இருந்தே, திநகர் அலுவலகத்தில் ஏற்கனவே பாமக அலுவலகம் செயல்பட்டு வந்தது என்பதை ராமதாஸ் ஏற்றுக் கொள்கிறார் எனவும் குறிப்பிட்டார்..

தொடர்ந்து தேர்தல் ஆணையத்தின் சார்பில், அன்புமணி மற்றும் ராமதாஸ் என்ற தனி நபர்களுக்கு சின்னம் ஒதுக்கப்படவில்லை. பாமக என்ற பெயரில் மட்டுமே சின்னம் ஒதுக்கப்பட்டது,

பதிவு செய்யப்பட்ட கட்சியான பாமக இலவச சின்னமான மாம்பழத்தை ஒதுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தது. அதனடிப்படையில் சின்னம் வழங்கப்பட்டது.

Ramadoss and Anbumani Ramadoss

உச்சநீதிமன்றம் கூட குறிப்பிட்ட பிரிவுகளை தவிர சின்னம் ஒதுக்கீடு தொடர்பான தேர்தல் ஆணையம் முடிவில் தலையிட முடியாது. 2 ஆண்டுகள் எந்த அலுவலகத்தில் இருந்து தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் வந்ததோ? அந்த முகவரிக்கு தான் சின்னம் ஒதுக்கீடு செய்து கடிதம் அனுப்பப்பட்டது என திட்டவட்டமாக கூறினார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இவ்வழக்கின் விசாரணையில் இன்று மாலையே தீர்ப்பு வழங்கப்படும் என தெரிவித்தார்.