தமிழ்நாடு

“ ஓய்வுபெற்ற ஐஏஎஸ் தேவசகாயத்தை மாநிலங்களவை எம்.பி.யாக்குங்கள்”- ஸ்டாலினுக்கு கடிதம்

Rasus

ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி தேவசகாயத்தை திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் ஜூலை 24-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 18-ஆம் தேதி நடைபெறுகிறது. ஒரு மாநிலங்களவை உறுப்பினரை தேர்வு செய்ய 34 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. அப்படிப் பார்த்தால் ஜூலை 18-ஆம் தேதி நடக்கும் தேர்தல் மூலம் அதிமுகவை சேர்ந்த 3 பேரும், திமுகவை சேர்ந்த 3 பேரும் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வாக முடியும்.

ஏற்கெனவே நடைபெற்ற மக்களவை தேர்தலின்போது, மதிமுகவிற்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்படும் எனக் கூறியதால்தான் திமுகவுடன் மதிமுக உடன்படிக்கை செய்துக் கொண்டது. எனவே மதிமுகவிற்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்படும் எனத் தெரிகிறது.

இந்நிலையில் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி தேவசகாயத்தை திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. பேராயர் எஸ்ரா சற்குணம், தாமஸ் பிராங்கோ உள்ளிட்டோர் சார்பில் இந்தக் கடிதம் எழுதப்பட்டுள்ளது. மக்கள் பணிக்கான அனுபவமும், உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் தேவசகாயத்தை எம்.பி. ஆக்குவது, திமுகவின் பெருமைக்கு மகுடம் சேர்க்கும் எனவும் அவர்கள் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.