தமிழ்நாடு

“சொத்துகளை அபகரித்துவிட்டு மகன் கொடுமைப்படுத்துகிறார்”.. முதிய தம்பதி கண்ணீர் மல்க பேட்டி!

JananiGovindhan

தங்களது சொத்துகளை ஏமாற்றி வாங்கிய மகன் குறித்து திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரிடம் வயதான பெற்றோர் புகாரளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்க்கிறது.

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அடுத்த வல்கடம்பு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஆசிர்வாதம் இந்திரர் மற்றும் அன்னபூரணம் தம்பதியர். 84 வயதாகும் இவர்களுக்கு 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். மகள்கள் மூவருக்கும் திருமணம் நடத்தி முடித்துவிட்ட நிலையில், இவர்களுடன் மகன் ஆறம் சின்னப்ப இந்திரர் வசித்து வருகிறார்.

இப்படி இருக்கையில், பெற்றோரை கடைசிவரை கவனித்துக் கொள்வதாக கூறிவிட்டு அவர்களது சொத்துகளை எழுதி வாங்கியிருக்கிறார் ஆறம் சின்னப்ப இந்திரர். குறிப்பாக ஏழு ஏக்கர் மதிப்பிலான விவசாய நிலங்கள், சொந்த வீடு என 50 லட்சத்திற்கும் மேலான சொத்துகள் அனைத்தையும் ஆசிர்வாதம் இந்திரரின் மகன் பெற்றுக்கொண்டு பெற்றோர் என்றும் பாராமல் அவர்களை பட்டினிப்போட்டு அடித்து, துன்புறுத்தி இருக்கிறார்.

இதனால் மிகவும் மனமுடைந்துப்போன அந்த வயதான் தம்பதி முதலில் சேரன்மகாதேவி கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்று மகனின் கொடுமைகள் குறித்தும், தங்களது சொத்துகளை மீட்டுத்தரக் கோரியிருக்கிறார்கள். ஆனால், கோட்டாட்சியரோ ஆசிர்வாதம் இந்திரரின் மகனிடம அவரது பெற்றோருக்கு மாதம் 2,000 ரூபாய் தர வேண்டும் என உத்தரவிட்டிருக்கிறார். அதேவேளையில் சொத்துக்களை மீட்டுத் தருவது தொடர்பாக எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில் கோட்டாட்சியரிடம் இருந்து தங்களுக்கு எந்த நீதியும் கிடைக்காததால் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரிடம், மகனால் தங்களுக்கு ஏற்பட்ட அவல நிலை குறித்தும், அபகரிக்கப்பட்ட சொத்துகளை மீண்டும் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டும் முறையிட்டிருக்கிறார்கள் ஆசிர்வாதம், அன்னபூர்ணம் தம்பதியர்.

ALSO READ: