தமிழ்நாடு

தொடங்கியது கண்ணைக்கவரும் சர்வதேச பலூன் திருவிழா... ராட்சத பலூனில் பறக்க கட்டணம் எவ்வளவு?

webteam

தமிழக சுற்றுலாத்துறை சார்பில் பொள்ளாச்சியில் எட்டாவது சர்வதேச பலூன் திருவிழா துவங்கியது.

தமிழகத்தின் சுற்றுலாத் தலங்களை மேம்படுத்தும் நடவடிக்கையாக கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் முதல்முறையாக தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில் எட்டாவது சர்வதேச பலூன் திருவிழா இன்று தொடங்கியது. பொள்ளாச்சி கோவை சாலையில் உள்ள ஆச்சிபட்டி மைதானத்தில் துவங்கிய பலூன் திருவிழாவில் பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாண்ட்ஸ், அமெரிக்கா உள்ளிட்ட எட்டு நாடுகளில் இருந்து வரவழைக்கப்பட்ட 12 வெப்ப காற்று பலூன்கள் காற்றில் பறக்க விடப்பட்டன.

இந்த பலூன் திருவிழாவை பல மாநிலங்களில் இருந்து வந்திருந்த  சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனர். இந்த பலூன் திருவிழா தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெற உள்ளது. வெப்ப காற்று பலூனில் பறக்க, ஒரு நபருக்கு கட்டணமாக ரூ.25,000 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சுற்றுலாப்பயணி ஒருவர் கூறுகையில், “இதுபோன்ற பலூன் திருவிழா வெளிநாடுகளில் நடைபெறும். தமிழ்நாட்டில் பலூன் திருவிழா நடைபெறுவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. ராட்சச பலூன்களில் வெப்பக் காற்றை நிரப்புவது, ஒரே நேரத்தில் பலவகையான வண்ணங்களில் பலூன்களை வானில் காண்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இருப்பினும் பலூனில் பறப்பதற்கு ஒரு நபருக்கு 25 ஆயிரம் ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சாதாரண மக்கள், நடுத்தர மக்கள் இதில் பயணிக்க முடியாத நிலை உள்ளது. எனவே அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்தும் வகையில் கட்டணத்தை குறைக்க வேண்டும்'' என்று சுற்றுலாப் பயணிகள் சார்பாக கோரிக்கை விடுத்தார்.