தமிழ்நாடு

ஜூன் 20ல் எஸ்.வி.சேகர் ஆஜராக நீதிமன்றம் சம்மன்

rajakannan

பெண் பத்திரிகையாளர் குறித்து அவதூறு கருத்து தெரிவித்த புகாரில் ஜூன் 20 இல் எஸ்.வி.சேகர் ஆஜராக நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

பெண் பத்திரிகையாளர்கள் குறித்து பாஜகவின் எஸ்.வி.சேகர் ஃபேஸ்புக் பக்கத்தில் இழிவான கருத்தை பதிவிட்டிருந்தார். இதுதொடர்பாக பத்திரிகையாளர்கள் நலச் சங்கம் அளித்த புகாரின் அடிப்படையில் எஸ்.வி.சேகர் மீது காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து எஸ்.வி.சேகர் முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். அதேசமயம் எஸ்.வி.சேகருக்கு முன் ஜாமீன் வழங்க ஆட்சேபம் தெரிவித்து பத்திரிகையாளர்கள் பலரும் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இதில் தீர்ப்பு வழங்கிய சென்னை உயர்நீதிமன்றம், எஸ்.வி.சேகரின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும் எஸ்.வி.சேகர் மீது நடவடிக்கை எடுக்கலாம் என காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் அனுமதியும் வழங்கியது. எஸ்.வி.சேகரை கைது செய்ய தடையில்லை எனவும் நீதிமன்றம் தெரிவித்தது. இருப்பினும், எஸ்.வி.சேகர் இதுவரை கைது செய்யப்படவில்லை.

இந்நிலையில், ஜூன் 20 இல் எஸ்.வி.சேகர் ஆஜராக எழும்பூர் நீதிமன்ற தலைமை மாஜிஸ்ட்ரேட் சம்மன் அனுப்பியுள்ளார். முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் எஸ்.வி.சேகர் ஆஜராக நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. ஜூன் 20ம் தேதி காலை 10 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டுமென அந்த சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது.