கர்நாடக சிறையிலிருந்து சுதாகரனை அடுத்த 7-ஆம் தேதி கண்டிப்பாக அழைத்து வந்து ஆஜர்படுத்த அமலாக்கத்துறைக்கு சென்னை எழும்பூர் பொருளாதாரக் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சூப்பர் டூப்பர் டிவி தொடர்பாக கடந்த 2002-ல் அமலாக்கத்துறையினர் சுதாகரன், பாஸ்கரன் மீது அன்னிய செலாவணி மோசடி வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கின் விசாரணை இன்று எழும்பூர் பொருளாதார குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி மலர்மதி முன்பு விசாரணைக்கு வந்தது. பாஸ்கரன் நேரில் ஆஜரான நிலையில், சுதாகரன் பெங்களுரூ பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டிருப்பதால் ஆஜராகவில்லை.
இந்த வழக்கு தொடர்பாக, சுதாகரன் நேரில் ஆஜராக வேண்டும் என ஏற்கனவே வாரன்ட் பிறப்பித்து கர்நாடக சிறைத்துறைக்கு அனுப்பட்ட நிலையில், உத்தரவையும் மீறி இன்று சுதாகரன் ஏன் ஆஜராகவில்லை என நீதிபதி கேள்வி எழுப்பினார். எனவே, சுதாகரனுக்கு மீண்டும் வாரண்ட் பிறப்பித்த நீதிபதி, வரும் ஜூன் 7-ஆம் தேதி கண்டிப்பாக சுதாகரனை நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டார்.