தமிழ்நாடு

ஐபிஎல் வழக்கிலும் கருணாஸூக்கு ஜாமீன் - விடுதலை ஆவாரா?

ஐபிஎல் வழக்கிலும் கருணாஸூக்கு ஜாமீன் - விடுதலை ஆவாரா?

rajakannan

ஐபிஎல் போராட்ட வழக்கில் எம்.எல்.ஏ கருணாஸுக்கு ஜாமீன் கிடைத்ததை அடுத்து அவர் சிறையில் இருந்து விடுவிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறார். 

கடந்த 16-ஆம் தேதி சென்னையில் முக்குலத்தோர் புலிப்படை அமைப்பு சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய கருணாஸ், காவல்துறையினரையும் முதலமைச்சரையும் விமர்சித்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக கொலை முயற்சி, கொலை மிரட்டல் உள்ளிட்ட எட்டுப் பிரிவுகளின் கீழ் கருணாஸ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதனையடுத்து, சென்னை சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் வைத்து கருணாஸை செப்டம்பர் 23ம் தேதி காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட கருணாஸ், புழல் சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் வேலூர் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார். பின்னர், ஜாமீன் கோரி கருணாஸ் தரப்பில் எழும்பூர் நீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டது.

இதனிடையே, ஐபிஎல் போராட்ட வழக்கில் சிறையில் இருந்தவாரே கருணாஸை போலீசார் கைது செய்தனர். ஐபிஎல் போட்டிக்கு எதிரான போராட்டத்தில் ரசிகர்களை முக்குலத்தோர் புலிப்படை அமைப்பினர் தாக்கியதாக, கருணாஸ் உள்ளிட்டோர் மீது திருவல்லிக்கேணி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்திருந்தது. இந்த வழக்கிலும் ஜாமீன் கோரி கருணாஸ் தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. 

இந்நிலையில், நேற்று முதலமைச்சர் மற்றும் காவல்துறையினருக்கு எதிராக அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் கருணாஸுக்கு எழும்பூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இந்நிலையில், ஐபிஎல் போராட்ட வழக்கில் இன்று கருணாஸுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் 30 நாட்களுக்கு நாள்தோறும் ஆஜராகி கையெழுத்திட நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. 2 வழக்குகளில் கைதான கருணாஸுக்கு ஜாமீன் வழங்கப்பட்டதால் சிறையில் இருந்து விடுவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.