கொரோனாவுக்கு மருந்து இருப்பதாக வதந்தி பரப்பிய விவகாரத்தில் சித்த மருத்துவர் எனப்படும் திருத்தணிகாசலத்தை 6 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது.
கொரோனோ நோய்க்கு மருந்து இருப்பதாகக் கூறி விளம்பரம் செய்ததற்காக, சித்த மருத்துவர் திருத்தணிகாசலம் மே 6ஆம் தேதி கைது செய்யப்பட்டார். தற்போது அவர் நீதிமன்ற காவலில் இருக்கிறார்
இந்திய மருத்துவத்துறை அளித்த புகாரில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட திருத்தணிகாசலத்தை, 7 நாள் காவிலில் வைத்து விசாரிக்க சென்னை காவல்துறை எழும்பூர் நீதிமன்றத்தில் அனுமதி கோரியது. காவல்துறையினரின் கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம், மே 18ஆம் தேதி வரை திருத்தணிகாசலத்தை காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்தது.
முன்னதாக, பொதுமக்களின் நலனுக்கு ஆபத்து ஏற்படுத்தும் விதமாக செயல்பட்டு வரும் போலி சித்த மருத்துவர் திருத்தணிகாசலம் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்குமாறு, இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி மருத்துவத்துறை இயக்குநர் சார்பில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் அவரை ஐடி சட்டத்திலும், அரசுக்கு எதிராக தகவல் வெளியிட்டது மற்றும் நோய்த்தொற்று தடுப்பு சட்டத்தின் கீழும் கைது செய்தனர்.