தமிழ்நாடு

"பிரசாரமும் எடுபடல.. அட! எடப்பாடியே எடுபடுல" – பண்ருட்டி ராமச்சந்திரன்

webteam

ஈரோடு இடைத்தேர்தலில் எடப்பாடியின் பிரச்சாரம் மக்களிடம் எடுபடவில்லை என்பதைவிட எடப்பாடியே மக்களிடம் எடுபடவில்லை என பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்தார்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இல்லத்தில் அவரது ஆதரவாளரான பண்ருட்டி ராமச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்... :

ஓ.பி.எஸ் தொலைபேசியில் தொடர்புகொண்டு என்னிடம் கூறியதன் அடிப்படையில் இன்று செய்தியாளர்களை சந்திக்கிறேன். இடைத்தேர்தல் முடிவு பேரதிர்ச்சியையும் வேதனையையும் தருகிறது. இந்த நிலைமைக்கு யார் காரணம்? ஓ.பி.எஸ் ஆரம்பம் முதல் ஒற்றுமையை வலியுறுத்தினார். ஆனால், எடப்பாடியும் அவரது அணியினரும் அதை விரும்பவில்லை.

இந்த தேர்தலில் இரட்டை இலை சின்னத்தின் மூலம் போட்டியிட்டு டெபாசிட் பெற்றது மட்டும் ஆறுதலாக உள்ளது. இந்த நிலைக்கு காரணம் எடப்பாடியின் ஆணவப்போக்கு தான். முதலமைச்சர் ஆன பிறகு எடப்பாடியை முன்னிறுத்திய அனைத்து தேர்தல்களிலும் தோல்வியைத் தழுவினோம். இதே நிலை தொடர்ந்தால் கட்சியையும் இழந்து விடுவோம் என்ற பயம் வந்துள்ளது. ஒன்று பட்டால் உண்டு வாழ்வு அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இந்த தோல்விக்கு யார் காரணமோ அவர்களை தொண்டர்கள் தூக்கியெறிய வேண்டும்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எடப்பாடியின் பிரச்சாரம் மக்களிடம் எடுபடவில்லை என்பதைவிட எடப்பாடியே மக்களிடம் எடுபடவில்லை. நாயை கல்லால் அடித்தால் கல் எங்குபட்டாலும் காலைத்தான் தூக்கும் அது போலதான் பணநாயகம் வென்றது என்கிறார். இப்போதுதான் தெரியுமா பணநாயகம் என்று.

இவருக்கு ஓட்டு போடுவதைவிட திமுகவிற்கு போடலாம் என 1 லட்சத்திற்கும் மேல் வாக்களித்துள்ளனர். மக்களின் கவனத்தை ஈர்க்கும் விதமாக எந்த திட்டங்களையும் கொள்கைகளையும் இவர்கள் கொண்டுவரவில்லை அதுதான் தோல்விக்கு காரணம். நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமாக இந்த வெற்றி என்ற ஸ்டாலின் கருத்திற்கு ஸ்டாலின் எடப்பாடிக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். எடப்பாடியால் தான் அவர் அப்படி சொல்கிறார்.

எடப்பாடி தலைவணங்கி தோல்வியை ஏற்கிறார். நாங்கள் தலைகுனிந்து ஏற்கிறோம். எடப்பாடி பழனிசாமி தன்னை சுயபரிசோதனை செய்து இணைப்பிற்கு முன்வர வேண்டும். திமுகவினர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரை கட்சியில் இருந்து நீக்கினர். ஆனால், புரட்சித்தலைவர் உயிரோடு இருக்கும் வரை அவர்களால் ஆட்சிக்கு வர முடியவில்லை. மக்கள் ஆதரவுதான் முக்கியம். பொதுக்குழு உறுப்பினர்கள் முக்கியம் அல்ல என்று தெரிவித்தார்.