தமிழக எல்லைகளில் உள்ள திரையரங்குகளை மூட முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தேவையின்றி வெளிமாநிலங்களுக்கு செல்ல வேண்டாம். கூட்டம் நிறைந்த இடங்களுக்கு முதியவர்கள், குழந்தைகள், நோயாளிகள் செல்ல வேண்டாம். தமிழகம் முழுவதும் எல்.கே.ஜி முதல் 5 ஆம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளுக்கு மார்ச் 31 ஆம் தேதி விடுமுறை விடப்படுகிறது.
வீட்டிற்குள் நுழையும் போதும், அவ்வபோது சோப்பு போட்டு கைகளை கழுவ வேண்டும். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட 60 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எல்லையோர மாவட்டங்களான தேனி, கன்னியாக்குமரி, திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, கிருஷ்ணகிரி, திருநெல்வேலி, தென்காசி, திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, ஈரோடு, திண்டுக்கல், தர்மபுரி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் உள்ள திரையரங்குகள், வணிக வளாகங்கள் போன்றவற்றை மார்ச் 31 வரை மூட வேண்டும்.
பொது இடங்களில் கூடுவதை 15 நாட்களுக்கு தவிர்க்க வேண்டும். வழிபாட்டு தலங்களுக்கு வருவோரை சுகாதாரத்துறை கண்காணிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.