தமிழ்நாடு

அரியலூரில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதி அளிக்கக்கூடாது: எடப்பாடி பழனிசாமி

webteam

அரியலூர் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு தமிழக அரசு அனுமதி அளிக்கக்கூடாது என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தஞ்சை நெற்களஞ்சியத்தை பாலைவனமாக்கும் பலதிட்டங்களுக்கு வித்திட்டது திமுகவின் டி.ஆர்.பாலுதான். அதேபோல் ஆழ்துளை கிணறு அமைத்து ஆய்வு பணிதுவங்க நான்கு ஆண்டுகளுக்கு கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கு அனுமதி அளித்தது திமுகதான்.

2016 தேர்தல் அறிக்கையில் ஜெயலலிதா அவர்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் இதர விவசாய பகுதிகளுக்கு மீத்தேன் எரிவாயுத்திட்டம், ஷேல் எரிவாயுத்திட்டம் போன்ற திட்டமும் அனுமதிக்கப்படாது என அறிவித்திருந்தார். அதன்படி அதிமுக ஆட்சியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு தடையில்லாச் சான்று வழங்கவில்லை.

இந்நிலையில், அரியலூர் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி கேட்டு ஓஎன் ஜிசி நிறுவனம் தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாக தெரியவருகிறது. அந்த கடிதத்திற்கு தமிழக அரசு கடுமையான எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.