அத்திவரதர் தரிசன ஏற்பாடுகள் தொடர்பாக முதல்வர் பழனிசாமி தலைமையில் அமைச்சர்கள், அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
வரதராஜர் பெருமாள் கோயிலில் உள்ள திருக்குளத்தில் இருந்து 40 ஆண்டுகளுக்குப் பின் எடுக்கப்பட்ட அத்திவரதரை தரிசிக்க நாடு முழுவதும் இருந்து திரளான பக்தர்கள் காஞ்சிபுரத்தில் குவிந்து வருகின்றனர். இதுவரை 24 லட்சத்துக்கும் மேற்பட்டோர் அத்திவரதரை தரிசித்துள்ளனர். அண்மையில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 4 பேர் உயிரிழந்ததை அடுத்து, அத்திவரதர் தரிசனத்துக்கான ஏற்பாடுகளில் பல்வேறு மாற்றங்களை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது.
அத்திவரதர் வைபவத்தில் கூட்ட நெரிசலில் 4 பேர் உயிரிழந்துள்ளது தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பியிருந்தார். பல லட்சம் பக்தர்கள் குவியும் பகுதியில் முறையான பாதுகாப்பு இல்லை எனவும் உயிரிழந்தவர்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
இந்நிலையில், அத்திவரதர் தரிசன ஏற்பாடுகள் தொடர்பாக முதல்வர் பழனிசாமி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். ஆலோசனையில் துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள், அதிகாரிகள், டிஜிபி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.