தமிழ்நாடு

“உடனடியாக ரூ. 1000 கோடி நிதியுதவி வழங்குங்கள்” மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் கோரிக்கை

webteam

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக கூடுதல் நிதி ஒதுக்க மத்திய அரசுக்கு தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

இன்று பிரதமர் மோடி அனைத்து மாநில முதலமைச்சர்களுடனும் காணொலி காட்சி மூலம் கொரோனா நோய் தொற்று பற்றிய கலந்தாய்வு கூட்டத்தினை நடத்தினார். இதுவரை நடைபெற்ற காணொலிக் காட்சிகளில் பேசாத முதலமைச்சர்கள் இன்றைய தினம் பேசினர். நேரமின்மை காரணமாக பேசாத பிற மாநில முதலமைச்சர்கள் ஃபேக்ஸ் வாயிலாக கோரிக்கைகளை அனுப்ப பிரதமர் கேட்டுக்கொண்டார்.

அதன்படி ஃபேக்ஸ் வாயிலாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடியிடம் கோரிக்கைகளை வலியுறுத்தினார். அதில், கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக கூடுதல் நிதி ஒதுக்க மத்திய அரசுக்கு முதலமைச்சர் பழனிசாமி கோரிக்கை விடுத்தார். மேலும் உடனடியாக 1000 கோடி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிசிஆர் பரிசோதனை கருவிகளை மத்திய அரசு கூடுதலாக வழங்க வேண்டும் எனவும் சிறு குறு தொழில் துறையினர் பெற்றுள்ள கடன்களுக்கான வட்டியை 6 மாதங்களுக்கு தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

சிறு குறு தொழில் துறையினர் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதால் ஜிஎஸ்டி, வருமான வரி செலுத்த 6 மாதம் கால அவகாசம் தேவை எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.