திமுகவின் தேர்தல் அறிக்கையில் கூறியவாறு முக்கியமான கட்டுமானப் பொருள்களை அத்தியாவசியப் பொருள்களின் பட்டியலில் சேர்த்திடுமாறு, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
சிமெண்ட், கம்பி, செங்கல், மணல், மரம் போன்ற கட்டுமானப் பொருள்களை அத்தியாவசியப் பொருள்கள் பட்டியலில் கொண்டு வருவதாக திமுகவின் தேர்தல் வாக்குறுதியை சுட்டிக்காட்டி எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “நிறைவேற்ற முடியாத பல வாக்குறுதிகளை தேர்தல் சமயத்தில் அளித்து பின்வாசல் வழியாக ஆட்சியை பிடித்த திமுக அரசு, தனது தேர்தல் வாக்குறுதி எண்.468ல் முக்கிய கட்டுமான பொருட்களை அத்தியாவசிய பொருட்கள் பட்டியலின் கீழ் கொண்டுவந்து நியாயமான விலையில் கிடைக்க செய்வோம் என்று கூறியது
ஆனால், திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின் கட்டுமானப் பொருள்களின் விலை உயர்ந்து வருவதாக, அதிமுக ஆட்சியில் இருந்த விலையுடன் ஒப்பிட்டு எடப்பாடி பழனிசாமி பட்டியலிட்டுள்ளார். சிமெண்ட் மூட்டை பிற மாநிலங்களைவிட தமிழ்நாட்டில் 100 ரூபாய் அதிகமாகவும், பிற கட்டுமானப் பொருள்களின் விலை தமிழ்நாட்டை விட பிற மாநிலங்களில் 30 சதவிகிதம் வரை குறைவாகவே உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.