செய்தியாளர்: ராஜ்குமார்
சட்டப்பேரவை கூட்டத் தொடரில் தமிழக ஆளுநர் உரை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் இன்று மதியம் நேரத்திற்கு பிறகு எதிர்க் கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பேசினார். அப்போது “2021 சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக நீட் தேர்வுக்கு விலக்கு பெறப்படும் என்று வாக்குறுதி கொடுத்தது என்ன ஆனது?” என தமிழக அரசிடம் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “I.N.D.I.A. கூட்டணி ஆட்சிக்கு வந்திருந்தால் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற்று இருப்போம். அதேபோல் ஏற்கெனவே இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது” எனக்கூறினார்.
மீண்டும் பேசிய எடப்பாடி பழனிசாமி, “இந்த விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுகிறது. காங்கிரஸ் உடன் திமுக கூட்டணி ஆட்சி இருக்கும் போதுதான் இது கொண்டு வரப்பட்டது. அதேபோல் இனி I.N.D.I.A. கூட்டணி ஆட்சிக்கு வருவதற்கு வாய்ப்பு இல்லை. இதை அறிந்தே வாக்குறுதி கொடுத்தீர்கள்” என்று எடப்பாடி பழனிசாமி பேசினார்.
மீண்டும் பதில் அளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பா.ஜ.க உடன் அதிமுக கள்ளக் கூட்டணி வைத்து இருப்பதாக பேசினார்.
எடப்பாடி பழனிசாமி மீண்டும் பேசும்போது, “I.N.D.I.A. கூட்டணியை ஆதரித்துக் கொண்டு கலைஞர் நூற்றாண்டு நாணயம் வெளியீட்டு விழாவில் பா.ஜ.க மத்திய அமைச்சரை அழைத்து நாணயம் வெளியிட்டது ஏன்?” என கேள்வி எழுப்பினார்.
மீண்டும் முதலமைச்சர் பேசும்போது “மத்திய அமைச்சரை அழைத்து கலைஞர் கருணாநிதி நாணயம் வெளியிட்டதில் என்ன தவறு உள்ளது? பிரதமரை அழைத்தோம் அவரால் வர முடியவில்லை என்பதனால் மத்திய அமைச்சர் வந்து வெளியிட்டார். இதில் என்ன தவறு உள்ளது? அதேபோல் நான்கு வருடங்கள் ஆட்சியை காப்பாற்ற நீங்கள் 4 வேடம் போடவில்லையா?” என முதல்வர் பேசினார்.
இந்த நேரத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, “பா.ஜ.க வுடன் கூட்டணியில் அதிமுக இல்லை” என பேசினார். பின்னர் சபாநாயகர் அப்பாவு குறுக்கீட்டிற்கு பின் நீட் தேர்வு தொடர்பான வாதம் முடிக்கப்பட்டது.