தமிழ்நாடு

''திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை'' - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

''திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை'' - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

கலிலுல்லா

திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டதாகவும், பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்றும் சட்டமன்ற எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழக சட்டமன்ற கூட்டம் இன்று தொடங்கியது. முதல் நாளான இன்று அதிமுக உறுப்பினர்கள் ஆளுநர் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். தமிழக சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ''தமிழகத்தில் திமுக ஆட்சிகாலத்தில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர் குலைந்துவிட்டது. கொலை, கொள்ளை, திருட்டு, செயின்பறிப்பு, சிறுமிகள் பாலியல் வன்கொடுமை ஆகியவை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை. காவல்துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் சட்டம் ஒழுங்கு பிரச்னையில் கவனம் செலுத்தவில்லை என்பது தெளிவாகிறது. தமிழகத்தில் கஞ்சா, குட்கா, போதைப்பொருட்கள் புழக்கம் அதிகரித்துள்ளது. வெளிமாநிலங்களிலிருந்து டன் கணக்கில் குட்கா தமிழகத்திற்கு கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

போதைப்பொருட்களினால், இளைஞர்கள், மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசுக்கு கண்டனங்கள். சென்னையில அண்மையில் பெய்த கனமழையால் பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகினர். வடகிழக்குப்பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு தவறிவிட்டது. இதனால் சாலைகள் நீர் தேங்கி மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திமுக எந்த நிவாரணமும் வழங்கவில்லை.

மக்களுக்கு திமுக அரசு பொங்கல் பரிசு வழங்கவில்லை. அதிமுக ஆட்சியில் அம்மா மினி கிளினிக்கை திறந்தோம். ஆனால், அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் அம்மா மினி கிளினிக்கை திமுக அரசு முடியிருக்கிறது. இதற்கு கண்டனம் தெரிவிக்கிறோம். மழையால் சேதமடைந்த நெற்பயிர்களுக்கு எந்தவித நிவாரணமும் வழங்கப்படவில்லை. காவல்துறை திமுகவின் ஏவல் துறையாக செயல்பட்டு வருகிறது. திமுகவினர் அரசு அலுவலகங்களுக்குச் சென்று அதிகாரிகளை மிரட்டும் போக்கு அதிகரித்து வருகிறது'' என்றார்.