எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி pt web
தமிழ்நாடு

“ஒரே வருடத்தில் 18 படங்கள்.. தனி வரலாறை படைத்தவர் விஜய்காந்த்” - இபிஎஸ் நேரில் அஞ்சலி

Angeshwar G

மருத்துவமனையில் சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டிருந்த விஜயகாந்த் இன்று காலை உயிரிழந்தார். சாலிகிராமத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடல் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் தற்போது வைக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சித் தலைவர்களும், பொதுமக்களும் அவரது உடலுக்கு நேரடியாக அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

விஜயகாந்த் மறைவு

இந்நிலையில் விஜயகாந்தின் உடலுக்கு அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

இதன் பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “சிறந்த நடிகர், திரையுலகிலும் அரசியலிலும் தனக்கென தனி முத்திரை பதித்தவர். அவர் 2005ல் மதுரையில் மாநாடு நடத்தி தேமுதிகவை உருவாக்கினார். தேமுதிகவை அரசியல் கட்சியாக அறிவித்தார். விருதாச்சலத்தில் சட்டமன்ற உறுப்பினராக போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2011 ஆம் ஆண்டு அதிமுக கூட்டணியில் இணைந்து 29 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்றார்.

ரிஷிவேந்தியத்தில் விஜயகாந்த் வெற்றி பெற்று சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக செயல்பட்டார். 1984 ஆம் ஆண்டு ஒரே வருடத்தில் 18 படங்களில் நடித்து திரையுலகிலேயே தனக்கென ஒரு வரலாற்றை படைத்துள்ளார். நடிகர் சங்கத்தின் தலைவராக பொறுப்பேற்று நடிகர் சங்கத்தின் கடனை அடைக்க பல்வேறு வெளிநாடுகளில் நட்சத்திர கலை நிகழ்ச்சி நடத்தி நிதி திரட்டி கடனை அடைக்க உதவி செய்துள்ளார்.

இப்படி மக்கள் சேவை செய்யக்கூடிய மக்களிடத்தில் மிகுந்த மரியாதை உடைய விஜயகாந்த் இன்று காலமானார் என்ற செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், தேமுதிக தொண்டர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறேன்” என தெரிவித்தார்.