செல்லூர் ராஜூ pt desk
தமிழ்நாடு

முதல்வர் பதவி திமுகவிற்கு பட்டா போட்டுள்ளதா? - 2026 ல் இபிஎஸ் தான் முதல்வர் - செல்லூர் ராஜூ

எம் ஜி ஆர் கட்சி தொடங்கியபோது அவரின் பின்னால் வந்த ரசிகர்களை விசிலடிச்சான் குஞ்சுகள் கட்சி என்று சொல்லி விமர்சித்தனர். ஆனால், அந்தக் கட்சி 30 ஆண்டுகள் ஆட்சியில் இருந்துள்ளது என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசினார்.

PT WEB

செய்தியாளர்: செ.சுபாஷ்

மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 108வது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக மதுரை மாநகர் மாவட்ட கழகம் சார்பாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில், மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே நேற்று இரவு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் நிர்வாகிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

MGR

இந்தப் பொது கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசுகையில்....

30 ஆண்டுகள் ஆட்சி செய்த கட்சி அதிமுக:

1972ல் எம்ஜிஆர் கட்சி தொடங்கிய போது அவர் பின்னால் இருந்த ரசிகர்களை விசிலடிச்சான் குஞ்சுகளை கொண்டு தொடங்கிய கட்சி 30 நாட்களாவது இயங்குமா என்று பலர் கேள்வி எழுப்பினர். இன்றைக்கு 30 ஆண்டுகள் ஆட்சியில் இருந்திருக்கிறது. 52 ஆண்டுகள் கட்சி வலுவுடன் உள்ளது. மக்களுக்கான பல திட்டங்களைக் கொண்டு வந்து மக்களுக்காகவே வாழ்ந்தவர் எம்ஜிஆர். எம்ஜிஆர் முதல்வராக இருந்த போது ஜானகி அம்மாள் அரசு வாகனங்களை பயன்படுத்தக் கூடாது என்று உறுதியுடன் இருந்தார்.

திமுக மலைப்பாம்பு போன்றது::

திமுகவினர் மலைப்பாம்பு போன்றவர்கள். நீண்ட காலம் ஆட்சியில் இல்லாமல் இருப்பார்கள்., ஒருமுறை ஆட்சி அதிகாரத்திற்கு வந்தவுடன் பணத்தை கொள்ளையடித்து சேர்த்துக் கொள்வார்கள். அதிமுக ஆட்சியில் காவல் துறையினருக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டது. இன்றைக்கு திமுக ஆட்சியில் காவல்துறை ஆமை வேகத்தில் ஏவல்துறையாக செயல்படுகிறது.

EPS

எப்படி இருந்த நான்...! இப்படி ஆயிட்டேன்...! இதுதான் இன்றைய காவல்துறையின் நிலைமை:

வேங்கை வயல் விவகாரத்தில் 3 ஆண்டுகள் ஆகியும் குற்றவாளிகளை கண்டறியாமல் இருந்து வரும் காவல்துறையினரை விமர்சனம் செய்து பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது அவைகள் தற்போது வைரலாகி உள்ளது. குறிப்பாக எதிர்க்கட்சிகள் நடத்தும் பொதுக் கூட்டங்களுக்கு காவல்துறையினர் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கின்றனர். காவல்துறையினரின் நிலைமைகள் தற்போது என்பது போன்று உள்ளது.

முதல்வர் பதவி திமுகவிற்கு பட்டா போட்டுள்ளதா...? ஆட்சி மாறும் காட்சிகள் மாறும். 2026 ல் புரட்சி தமிழர் எடப்பாடி தான் முதல்வர் என்பதை சூளுரைத்து சொல்வோம் என்று செல்லூர் ராஜூ பேசினார்.