தமிழ்நாடு

"இரு அணிகளுக்கு இடையில்தான் போட்டி; 3-வது அணியை மக்கள் ஏற்பதில்லை!" - முதல்வர் பழனிசாமி

"இரு அணிகளுக்கு இடையில்தான் போட்டி; 3-வது அணியை மக்கள் ஏற்பதில்லை!" - முதல்வர் பழனிசாமி

sharpana

தமிழகத்தைப் பொறுத்தவரை தேர்தல் களத்தில் போட்டி, இரண்டு திராவிட கட்சிகள் தலைமையிலான கூட்டணிகளுக்கு இடையில்தான் என்றும், மக்கள் மூன்றாவது அணியை ஆதரிப்பதில்லை என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

'தி இந்து' நாளிதழுக்கு அவர் அளித்த சிறப்புப் பேட்டியில், கமல்ஹாசன் போன்ற மூன்றாவது ஒருவர் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு குறித்த கேள்விக்கு இந்த பதிலை அளித்துள்ளார்.

மூன்றாவது அணியை மக்கள் நிராகரித்துள்ளனர் என்றும், கடந்த சட்டபேரவைத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி தோல்வி அடைந்ததே அதற்கு உதாரணம் எனக் கூறியுள்ளார்.

தங்களது கூட்டணியில் மாற்றம் வராது என்று குறிப்பிட்ட முதல்வர் பழனிசாமி, தொகுதி பங்கீடு குறித்து தேர்தல் அறிவித்த பின்னர் ஆலோசிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

பாரதிய ஜனதாவுடனான கூட்டணி குறித்து அதிமுகவிற்குள் எந்த கருத்து வேறுபாடும் இல்லை என்றும், இதை வெளிப்படுத்தும் வகையிலேயே அமித் ஷா கலந்துகொண்ட கூட்டத்தில் கூட்டணி தொடர்வதை அறிவித்ததாகவும் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.

தமக்கும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கும் கருத்து வேறுபாடு என கூறப்படுவதை மறுத்த முதல்வர், இருவரும் இணைந்து கட்சிக்காகவும், மாநிலத்திற்காகவும், மக்களுக்காகவும் உழைத்து வருவதாக தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, 2017 பிப்ரவரியில் ஓ.பி.எஸ் காட்டிய எதிர்ப்புப் போக்கு காரணமாக, முதல்வர் பதவிக்கு தன்னை சசிகலா தெரிவுசெய்ததாக கூறப்படுவதை மறுத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கட்சிக்கும் தலைமைக்கும் விஸ்வாசமாக இருந்ததன் அடிப்படையில் அதிமுக எம்.எல்.ஏ.-க்கள்தான் தன்னை முதல்வராகத் தேர்ந்தெடுத்தனர் என்று 'தி இந்து' நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார்.