கரூர் மாவட்டம், வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி இரவு தவெக தலைவர் விஜய் பரப்புரையில் ஈடுபட்டபோது ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக 10 குழந்தைகள் உட்பட 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், நடந்து என்ன என்பது குறித்து தனிநீதிபதி தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது விசாரணை நடைபெற்றுவருகிறது.
இந்தசூழலில் தவெக தரப்பினர் திமுக அரசை குற்றஞ்சாட்டி நீதிமன்றத்தை நாடியிருக்கும் நிலையில், அரசு தரப்பில் சென்னை தலைமை செயலகத்தில் கூடுதல் தலைமை செயலாளர் அமுதா, காவல்துறை பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமன், உள்துறை செயலாளர் திரஜ் குமார், கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசிர்வாதம், சுகாதாரத்துறை செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்டோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார்கள்.
இதனை விமர்சித்திருக்கும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, நீதிபதி தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டிருக்கும் நிலையில் இப்படி செய்தியாளர்களை சந்திப்பது விசாரணையை பாதிக்கும் செயல் என குற்றஞ்சாட்டியுள்ளார்.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கும் எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின் அரசு முற்றிலும் சீர்குலைந்துள்ளதாகவும், மக்களைப் பாதுகாப்பதில் ஏற்பட்ட தோல்வியை மறைப்பதே அரசின் நோக்கமாக இருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை நடந்துவரும் நிலையில், வருவாய் செயலர் ஊடகங்களுக்குப் பேட்டி அளிப்பது நீதி விசாரணையைப் பாதிக்கும் செயல் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
41 அப்பாவி மக்கள் உயிரிழந்த சம்பவத்துக்கான பொறுப்பிலிருந்து தப்பிக்கவும், உண்மையை மறைக்கவும் அரசு நாடகமாடுவதாகவும் பழனிசாமி சாடியுள்ளார்.