60 ஆண்டுகால கனவு திட்டமான அவிநாசி அத்திக்கடவு திட்டம் வழங்கியதற்காக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அன்னூரில் நேற்று பாராட்டு விழா நடைபெற்றது.
அத்திக்கடவு திட்ட கொடியுடன் நிகழ்ச்சி தொடங்கியது. கொங்கு மண்டல பகுதியான கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் நீர்வளம் இன்றி காய்ந்து போன தரிசு நிலங்கள் மற்றும் குளம் குட்டைகளுக்கு உயிர் கொடுக்க கடந்த 60 ஆண்டுகளாக காமராஜர் ஆட்சியில் அறிவிக்கப்பட்ட அவிநாசி அத்திக்கடவு திட்டம் செயல்படுத்த வேண்டும் என மக்கள் போராடி வந்தனர்..
இந்த திட்டம் ஒவ்வொரு தேர்தலிலும் வாக்குறுதியாக அளிக்கப்பட்டு வந்த நிலையில் யாரும் நிறைவேற்றவில்லை. இதற்காக விவசாயிகள் கடும் போராட்டங்களை முன்னெடுத்து வந்த நிலையில், கடந்த அதிமுக ஆட்சியில் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருந்த போது 1600 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த திட்டம் அப்போதைய மாநில அரசால் செயல்படுத்தப்பட்டது..
இந்த நிலையில், இத்திட்டம் உயிர்ப்பெற்றதன் மூலம் 500க்கும் மேற்பட்ட குளம், குட்டைகளுக்கு தண்ணீர் கிடைத்து வருவதால் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து அனைத்து கிணறுகள் மற்றும் ஆழ்குழாய் கிணறுகள் தண்ணீர் நிரம்பி வருகிறது..
எனவே இந்த திட்டம் வழங்கிய எடப்பாடி பழனிச்சாமிக்கு கோவை அன்னூர் அருகே உள்ள கஞ்சப்பள்ளி பிரிவு பகுதியில் பாராட்டு விழா நடைபெற்றது. அவிநாசி அத்திக்கடவு திட்ட ஒருங்கிணைப்பு குழு சார்பில் நடைபெற்று வரும் இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பங்கேற்கின்றனர்.
நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி திமுக அரசை விமர்சித்தார். அப்போது பேசிய அவர், “மக்கள் நலனை பற்றி திமுக அரசுக்கு அக்கறை இல்லை. திறமையற்ற அரசு ஆட்சியில் உள்ளது. அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தின் 85% பணிகள் அதிமுக ஆட்சியில் நிறைவடைந்துவிட்டன. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக 4 ஆண்டு காலம் திட்டத்தை கிடப்பில் போட்டனர். திட்டத்தை கொண்டுவர எந்த முயற்சியும் செய்யாமல் திறந்து மட்டும் வைத்தனர்.
ஆனால் விவசாயிகளின் கனவை அதிமுக நிறைவேற்றியுள்ளது. மத்திய அரசை எதிர்பார்க்காமல் மாநில அரசு நிதியை ஒதுக்கி திட்டத்தை தொடங்கி வைத்தேன். திமுக ஆட்சிக்கு வந்ததும் அதிமுக திட்டங்கள் நிறுத்தி வைக்கப்பட்டன” என விமர்சித்தார்.
அதேநேரம் தன்மீது வைக்கப்படும் விமர்சனங்கள் குறித்து பேசிய அவர், ”நான் யாருக்கும் அடிமையாக மாட்டேன், பணத்தாலும் பொருளாலும் என்னை யாரும் அடிமைப்படுத்த முடியாது” என தெரிவித்தார்.