தமிழ்நாடு

''எடப்பாடியார் என்றும் முதல்வர்" - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

''எடப்பாடியார் என்றும் முதல்வர்" - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

webteam

எடப்பாடி பழனிசாமி என்றும் முதல்வர் என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார்.

மதுரையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செல்லூர் ராஜூ, “அதிமுகவில் தகவல் தொழில்நுட்ப பிரிவு நன்றாக செயல்பட்டு வருகிறது. சட்டமன்ற தேர்தலுக்காக அதிமுக புயல் வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. இரு பெரும் தலைவர்கள், இபிஎஸ்-ஒபிஎஸ் தலைமையில் கட்சி நடைபெறும். அதில் மாற்றுக் கருத்தே இல்லை. தேர்தலுக்கு பின், சட்டமன்ற உறுப்பினர்கள் கூடி யாரை முதல்வர் என்கிறார்களோ அவரே தமிழக முதல்வர்” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில், “எடப்பாடியார் என்றும் முதல்வர். இலக்கை நிர்ணயித்துவிட்டு களத்தை சந்திப்போம். எடப்பாடியாரை முன்னிறுத்தி தளம் அமைப்போம். களம் காண்போம். வெற்றி கொள்வோம். 2021ம் நமதே” எனத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அமைச்சர் ராஜேந்திரபாலாஜி புதியதலைமுறைக்கு அளித்த பேட்டியில், “அமைச்சர் செல்லூர் ராஜு என்ன சொன்னார் என நான் பார்க்கவில்லை. என்னுடைய கருத்தை நான் சொல்லிவிட்டேன். மாற்றி பேசமாட்டேன். முடிவெடுத்துவிட்டுதான் களத்தை சந்திக்க வேண்டும். களத்தை சந்தித்துவிட்டு வந்து முடிவு எடுக்கக்கூடாது. அது குதிரை பேரத்துக்கு வழிவகுக்கும். இதனால் முதல்வரும் துணை முதல்வரும் வெளிப்படைத்தன்மையாக பேசி முன்னதாகவே முடிவு எடுக்க வேண்டும். ஏழை எளிய மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் எடப்பாடி பழனிசாமி உள்ளார். பயம் என்பதே இல்லாமல், அவர் செயல்படுத்தும் திட்டங்களை மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள். யார் நிலைக்க வேண்டும் என மக்கள் முடிவெடுத்துவிட்டார்கள். ” எனத் தெரிவித்தார்.