தமிழ்நாடு

கன்னியாகுமரியில் மீட்பு, நிவாரணப் பணிகளுக்கு ரூ.25 கோடி

webteam

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மீட்பு, நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகளை துரிதமாக மேற்கொள்ள ஏதுவாக 25 கோடி ரூபாயை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒதுக்கியுள்ளார். 

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "சேதமடைந்துள்ள மின் உள்கட்டமைப்புகளை விரைவில் சீர் செய்து, தடையில்லா மின்சாரம் வழங்கும் பொருட்டு, மீட்பு, நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகளை துரிதமாக மேற்கொள்ளவும் 25 கோடி ரூபாய் உடனடியாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார். 

இத்தொகையானது, மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், வேளாண்மைத் துறை, தோட்டக் கலைத் துறை, பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை, நகராட்சிகள் துறை, பேரூராட்சிகள் துறை, ஊரக வளர்ச்சித் துறை மற்றும் வருவாய்த் துறைக்கு ஆகியவற்றுக்கு வழங்கப்படும். 

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சீர் செய்யும் பணியில், பல்வேறு துறையினரை ஒருங்கிணைத்து போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொண்டு, மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு விரைவில் திரும்ப வழி வகை செய்ய அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்." என தெரிவிக்கப்பட்டுள்ளது.