தமிழ்நாடு

ஜி20 மாநாடு ஆலோசனை கூட்டத்தில் மோடியுடன் எடப்பாடி பழனிச்சாமி? வெளியான பரபரப்பு தகவல்!

webteam

ஜி20 மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவது தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜி-20 அமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்று உள்ளது. அடுத்த ஆண்டு  ஜி-20 மாநாடு இந்தியாவில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவதற்காக மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இதற்காக அனைத்து கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டத்துக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்து உள்ளது. அதற்காக அனைத்து மாநில முதலமைச்சர்கள், கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் என்ற அடிப்படையில் எடப்பாடி பழனிசாமிக்கு நாடாளுமன்ற விவகாரத்துறையிலிருந்து அழைப்பு வந்துள்ளது.

இந்த கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்வார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுகவில் உள்ள இடைக்கால பொதுச்செயலாருமான எடப்பாடி பழனிசாமியும் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. நாளைய தினம் ஜெயலலிதாவின் நினைவு நாள் அனுசரிக்கப்படுவதை ஒட்டி அவரது நினைவிடத்தில் எடப்பாடி பழனிச்சாமி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்துகிறார்.

பின்னர் டெல்லிக்கு புறப்பட்டு நாளை மாலை பிரதமர் தலைமையில் நடைபெற உள்ள ஆலோசனைக் கூட்டத்திலும் அங்கு இருக்க உள்ளார். மாநாட்டுக்கு பிறகு பிரதமர் மோடியை அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தனியாக சந்தித்து பேசுவதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.