எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி pt web
தமிழ்நாடு

”இப்படியே போனால் தமிழகமே சீரழிந்துவிடும்” - திடீரென ஆளுநரை சந்தித்த இபிஎஸ்!! பின்னணி என்ன?

Angeshwar G

ஆளுநர் ஆர்.என்.ரவியை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சந்தித்துள்ளார். தமிழகத்தில் போதைப் பொருள் புழக்கத்தை தடுக்க வலியுறுத்தியும், அதற்கு தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டியும் ஆளுநரிடம் மனு அளித்துள்ளார். எடப்பாடி பழனிசாமியுடன் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், எஸ்.பி.வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன் போன்றோரும் ஆளுநரை சந்தித்தனர்.

இதனை அடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, “போதைப்பொருள் சர்வசாதாரணமாக எல்லா இடத்திலும் கிடைத்துக்கொண்டு இருக்கிறது. இந்த நிலை இப்படியே தொடர்ந்தால் இன்னும் ஆறேழு ஆண்டு காலத்தில் போதைப்பொருள் நிறைந்த மாநிலமாக மட்டுமல்லாது, மாணவர்கள் இளைஞர்கள் பொதுமக்கள் என அத்தனை பேரும் இதற்கு அடிமையாகி தமிழகமே சீரழிந்துவிடும். இதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. இதில் எல்லோருக்கும் பங்கிருக்கிறது. இதை தட்டிக்கழித்தால் அது நம் நாட்டுக்கு செய்யும் மிகப்பெரிய துரோகம்.

#EPS | #EdappadiPalaniswami | #DMK | #ADMK

இந்த 10 நாட்களில் மட்டும் எவ்வளவு போதைப்பொருளை பிடித்துள்ளார்கள். இதற்கு முந்தியெல்லாம் இதுபோல் பிடிக்கவில்லையே. காவல்துறை செயல்படவேயில்லையே. காவல்துறைக்கும் அரசாங்கத்திற்கும் போதைப் பொருள் விற்பவர்களுடன் உறவு ஏற்பட்டுள்ளதோ என்ற சந்தேகம் எழுகிறது” என தெரிவித்துள்ளார்.

முன்னதாக போதைப்பொருள் கடத்தல் குறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட சமூக வலைத்தள பதிவில், திமுக நிர்வாகியாக இருந்த ஜாபர் சாதிக், மூன்றாயிரத்து 500 கிலோ போதைப் பொருட்களுக்கான மூலப்பொருட்களை கடத்தி, அதற்காக கட்சியை சார்ந்தவர்களுக்கு நிதி அளித்துள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளதாக குறிப்பிட்டிருந்தார். தன் ஆட்சியில், தன் கட்டுப்பாட்டின்கீழ் காவல்துறை இருக்கும்போதே, 3 ஆண்டுகளாக போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுவந்த ஜாபர் சாதிக்கை பிடிக்காமல் விட்டதோடு, அவருக்கு கட்சியில் அங்கீகாரத்தையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்ததாக குற்றம்சாட்டியிருந்தார்.

எனவே, முதலமைச்சரும், ஜாபர் சாதிக்குடன் நெருக்கமாக இருந்தவரான அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும், தார்மீக பொறுப்பேற்று, பதவிவிலகவேண்டும் என அவர் வலியுறுத்தியிருந்தார். அதனுடன், முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எம்.பி. கனிமொழி ஆகியோருடன் ஜாபர் சாதிக் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்ட எடப்பாடி பழனிசாமி, ஆளுநரை சந்தித்து இதுகுறித்து புகார் அளிக்க உள்ளதாகவும் தெரிவித்திருந்தார். தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களில் பறிமுதல் செய்யப்பட்டுள்ள போதைப்பொருட்களின் விவரம் அடங்கிய பட்டியலை ஆளுநரிடம் வழங்க முடிவு செய்து இன்று ஆளுநரை சந்தித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.