அமித் ஷா, இபிஎஸ் கோப்புப்படம்
தமிழ்நாடு

டெல்லியில் அமித் ஷாவுடன் சந்திப்பு.. எடப்பாடி பழனிசாமி விளக்கம்!

எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேசிய நிலையில், அதுகுறித்தும் அதுதொடர்பாக தன்மீது விழுந்த விமர்சனங்கள் குறித்தும் எடப்பாடி பழனிசாமி இன்று விளக்கமளித்துள்ளார்.

PT WEB

கைக்குட்டையால் முகத்தை மறைத்துச் சென்றதாக முதல்வர் ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை விமர்சனம் செய்திருந்த நிலையில், இன்றைய செய்தியாளர் சந்திப்பில் அதுகுறித்து காட்டமாக எதிர்வினையாற்றி இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

அதிமுகவில் உட்கட்சி பிரச்னை நடைபெற்றுவரும் நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சமீபத்தில் டெல்லி சென்று மத்திய அமைச்சர் அமித்ஷா வை சந்தித்துப் பேசியிருந்தார். பின்னர் வெளியே வந்த அவர், காரில் சென்ற போது கைக்குட்டையால் தனது முகத்தை மறைத்துச் சென்ற சம்பவம் சமூக ஊடகங்களில் பரவி பல விமர்சனங்களை ஏற்படுத்தியிருந்தது. இதனை, நேற்று நடைபெற்ற திமுகவின் முப்பெரும் விழா பொதுக்கூட்டத்திலும் முதல்வர் ஸ்டாலின் விமர்சனம் செய்திருந்தார். இந்தநிலையில், அமித் ஷா சந்திப்பு மற்றும் கைக்குட்டையால் முகத்தை மறைத்த சம்பவம் குறித்து சேலம் மாவட்டம் ஓமலூரில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று விளக்கமளித்தார்.

இபிஎஸ்

செய்தியாளர் சந்திப்பில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “நான் உள்துறை அமைச்சரைச் சந்திப்பதாக முறையாகச் சொல்லிவிட்டு, அரசு காரில் கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் பகிரங்கமாகத்தானே சென்றேன்; இதை ஏன் ஒரு முதலமைச்சர் விமர்சிக்க வேண்டும்? உள்துறை அமைச்சர் வீட்டிலிருந்து வெளியே வந்தபோது, முகத்தைத் துடைத்தேன்; இதை எடுத்து தரம்தாழ்ந்து அரசியல் செய்திருப்பது ஏற்புடையதல்ல” எனத் தெரிவித்தார்.

மேலும், எடப்பாடி பழனிசாமி பாஜகவிடம் அடிமை சாசனம் எழுதிக் கொடுத்திருப்பதாக முதல்வர் ஸ்டாலின் விமர்சனம் செய்திருந்த நிலையில், அதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, “திமுக ஆளுங்கட்சியான பிறகு, தாங்கள் எதிர்க்கட்சியாக இருந்தபோது யாரையெல்லாம் விமர்சித்தார்களோ, அவர்களையே ரத்தினக் கம்பளம் வைத்து வரவேற்றனர். பிரதமரை அழைத்து கேலோ இந்தியா, செஸ் ஒலிம்பியாட் உட்பட பல நிகழ்ச்சிகளை நடத்தியதையெல்லாம் பார்த்தோம்; எதிர்க்கட்சியாக இருந்தபோது கருப்பு பலூன் விட்டனர். ஆளுங்கட்சியானவுடன் வெள்ளைக் குடை பிடித்தனர். இதுதான் திமுகவின் நிலைப்பாடு” என்றார்.

எழுச்சியான பயணமாக இருக்கிறது!

தொடர்ந்து அமித்ஷா சந்திப்பு குறித்த கேள்விக்கு அவர், “எழுச்சிப் பயணம் சிறப்பாக இருக்கிறது என என்னிடம் உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார். தொடர்ந்து, முத்துராமலிங்கத் தேவருக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என அவரிடம் கேட்டுக்கொண்டேன்” என தெரிவித்தார், தொடர்ந்து பேசிய அவர், ”உள்துறை அமைச்சரைச் சந்தித்தது மட்டுமே முக்கியம்; அங்கு யாருடன் சென்றோம்; யாருடன் வந்தோம், எதில் சென்றோம்; எதில் திரும்பினோம் என்பது முக்கியமல்ல. கிடைக்கும் காரில் சென்றோம்” என தெரிவித்தார்.

தொடர்ந்து, ”அதிமுக உட்கட்சி விவகாரத்தில் பாஜகவின் தலையீடு இல்லை” எனக் கூறியவர், ”அண்மைக்காலமாக வேண்டுமென்றே கட்சி கட்டுப்பாட்டை மீறிச் சிலர் செயல்படுகின்றனர். அவர்கள்மீது தலைமை ஒழுங்கு நடவடிக்கையை எடுத்துள்ளது” எனத் தெரிவித்தார்.