தமிழ்நாடு

'ஆளுநர் உரை பெரும் ஏமாற்றம்; கொரோனா பரவலை தடுக்க அரசு தவறிவிட்டது' - எடப்பாடி பழனிசாமி

'ஆளுநர் உரை பெரும் ஏமாற்றம்; கொரோனா பரவலை தடுக்க அரசு தவறிவிட்டது' - எடப்பாடி பழனிசாமி

JustinDurai

சட்டமன்றத்தில் ஆளுநர் ஆற்றிய உரை பெரும் ஏமாற்றம் அளிக்கிறது என எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். 

16-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடரில், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றினார். இதனைத்தொடர்ந்து ஆளுநரின் உரை குறித்து கருத்து தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ''சட்டமன்றத்தில் ஆளுநர் ஆற்றிய உரை பெரும் ஏமாற்றம் அளிக்கிறது. நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று கூறிய திமுகவின் நிலைப்பாடு தற்போது மாறியுள்ளது. தேர்தல் வரும் போது ஒரு பேச்சு, இப்போது ஒரு பேச்சாக இருக்கிறது. 

திமுக ஆட்சி அமைத்து ஒரு மாதமாகியும் விவசாய கடன் ரத்து செய்த ரசீது வழங்கப்படவில்லை. மாணவர்களுக்கான கல்விக்கடன் ரத்து குறித்தும் ஆளுநர் உரையில் எதுவும் இடம்பெறவில்லை. சுய உதவிக்குழுக்கள் வாங்கிய கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றனர். அது குறித்த அறிவிப்பும் இல்லை. பெட்ரோல், டீசல் விலை குறைப்பு குறித்த அறிவிப்பும் ஆளுநர் உரையில் இடம்பெறவில்லை. 

குடும்பத்தலைவிகளுக்கு மாதந்தோறும் உரிமைத் தொகை வழங்குவது குறித்தும் உரையில் இடம் பெறவில்லை. மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகை உயர்த்துவது குறித்தும் ஆளுநர் உரையில் அறிவிப்பு இல்லை. கோதாவரி - காவிரி இணைப்புத் திட்டம் குறித்தும் ஒரு வரி கூட ஆளுநர் உரையில் இடம்பெறவில்லை. 

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த திமுக தலைமையிலான அரசு தவறிவிட்டது. கொரோனா தொற்றால் ஏற்பட்ட மரணங்கள் மறைக்கப்பட்டுள்ளன. அரசு மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை முறையாக மேற்கொள்ளப்படுவதில்லை'' என்று கூறினார்.