ஆளுநர் அழைப்புக்காக காத்திருப்பதாக அதிமுகவின் சட்டமன்ற கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
கூவத்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, அதிமுகவின் பொதுச்செயலாளர் சசிகலா தலைமையில் நடந்த கூட்டத்தில் கட்சியின் பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், சட்டமன்ற குழுத் தலைவராக தமது பெயரை முன்மொழிந்ததாகத் தெரிவித்தார். இதையடுத்து கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரின் ஆதரவுடன் ஒருமனதாக சட்டமன்ற கட்சித் தலைவராக தாம் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அவர் கூறினார். இதுகுறித்த கடிதம் ஆளுநருக்கு பேக்ஸ் மூலம் அனுப்பப்பட்டதாகவும், பெரும்பான்மையை நிரூபிக்கும்படி அவர் அழைக்கும்பட்சத்தில் அதை நிரூபிக்கத் தயாராக இருப்பதாகவும் ஆளுநர் அழைப்புக்காகக் காத்திருப்பதாகவும் எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.