தமிழ்நாடு

“கள்ள ஓட்டு போட முயன்றவரை பிடித்ததற்கு பரிசுதான் ஜெயக்குமாருக்கு சிறை”- இபிஎஸ் விமர்சனம்

நிவேதா ஜெகராஜா

“தேர்தல் ஆணையமும் காவல்துறையும் சேர்ந்து, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுகவை வெற்றிபெறச்செய்து விட்டனர்” என தமிழ்நாடு எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைதை கண்டித்து அக்கட்சியின் சார்பில் இன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்படி சேலத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, “கள்ள ஓட்டினால்தான், தேர்தலில் திமுக வெற்றிபெற்றது. கள்ள ஓட்டு போட முயன்ற ஒருவரை பிடித்து, காவல்துறையினரிடம் ஒப்படைத்ததற்கு பரிசாகத்தான், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு சிறைத்தண்டனை கிடைத்துள்ளது. ஜனநாயக முறைப்படி தேர்தல் நடந்திருந்தால் அதிமுக-தான் 100 சதவிகிதம் வெற்றி பெற்றிருக்கும். பணம், பரிசுப் பொருட்களை கொடுத்து திமுக மாயாஜால வெற்றியைப் பெற்றுள்ளது” என்று விமர்சித்தார்.

மேலும் அவர் பேசுகையில், ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்தார். பின்னர், “நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் தில்லுமுல்லு செய்துதான் திமுக வெற்றி பெற்றது. திமுக ஜனநாயக முறையில் தேர்தலை சந்திக்க திராணி இல்லாத கட்சி. காவல்துறையினர் செய்ய வேண்டிய செயலை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்துள்ளார். ஆனால் அவருக்கு சிறைத்தண்டனை கிடைத்துள்ளது. இந்தப் பிரச்னையில் சம்பந்தப்பட்ட நரேஷ்குமார், பல்வேறு குற்றவழக்குகளில் தொடர்புடையவர். ஆனால் நரேஷ்குமாருக்கு பாதுகாப்பாக இருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். அதுமட்டுமல்ல. திமுகவினர் கள்ள ஓட்டு போடுவதில் வல்லமை படைத்தவர்கள்.

ரவுடிகளும் குண்டர்களும் சுதந்திரமாக திரிந்த காரணத்தால்தான் கள்ள ஓட்டு போட்டும் சென்னையில் அவர்களுக்கு வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்துள்ளது. இதுவரை தமிழகத்தில் இல்லாத நிலை இந்த தேர்தலில் நடந்துள்ளது. நீங்கள் இப்போது தெரிந்தோ தெரியாமலோ திமுக அரசு எனும் வெயிலில் நின்று கொண்டிருக்கிறீர்கள். இலையின் நிழலின் அருமை இனிமேல் தான் உங்களுக்கு தெரியும்.  திமுகவில் உழைப்பவர்களுக்கு அந்தஸ்து கிடையாது; பல வழக்குகள் இருந்தால்தான் அந்தஸ்து கிடைக்கும். குற்றம் செய்பவர்களுக்கு ராஜமரியாதை கிடைக்கிறது. குற்றசெயல்களை ஊக்குவிக்கிறது திமுக அரசு” என்று கடுமையாக விமர்சித்தார்.

சேலம் மட்டுமன்றி திருவாரூர், கன்னியாகுமரி, தேனி, மதுரை, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் ஜெயக்குமார் கைதைக் கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.