தமிழ்நாடு

அடிப்படை உறுப்பினர் முதல் எதிர்க்கட்சித் தலைவர் வரை: அதிமுகவில் இபிஎஸ் வகித்த பதவிகள்!

அடிப்படை உறுப்பினர் முதல் எதிர்க்கட்சித் தலைவர் வரை: அதிமுகவில் இபிஎஸ் வகித்த பதவிகள்!

webteam

அதிமுகவின் சட்டப்பேரவை குழுத் தலைவராக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதைத்தொடர்ந்து தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் அவர் அமரவிருக்கிறார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக பெரும்பான்மை பலம் பெற்று ஆட்சியை பிடித்த நிலையில், அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் முதல் முறையாக முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். தேர்தலில் 66 இடங்களை வென்ற அதிமுக இம்முறை பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றது. இதைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவரை தேர்ந்தெடுப்பதற்காக அதிமுகவின் சட்டப்பேரவை உறுப்பினர்களின் கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அப்போது கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்திற்கும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே கருத்து வேற்றுமை நிலவியது. இதனால், எந்த முடிவும் எடுக்கப்படாமல் அன்றைய கூட்டம் முடிந்தது.

இந்நிலையில் தமிழகத்தின் 16ஆவது சட்டப்பேரவை நாளை கூடவிருக்கும் நிலையில், எதிர்க்கட்சித் தலைவரை தேர்ந்தெடுப்பதற்காக அதிமுகவின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் மீண்டும் கூடியது. அதிமுக நிர்வாகிகள் வைத்திலிங்கம், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட மூன்று பேர் பங்கேற்காத நிலையில், 63 எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர். சுமார் 3 மணி நேரம் நீடித்த இந்தக் கூட்டத்தில் இறுதியாக முன்னாள் முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

அதிமுகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. தொடர்ந்து அதிமுக சட்டப்பேரவை குழுத் தலைவராக தேர்வு செய்யப்பட்ட கடிதத்தை முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி உள்ளிட்டோர் சட்டப்பேரவை செயலரிடம் வழங்கினர்.

எடப்பாடி பழனிசாமி கடந்து வந்த பாதை:

  • 1974 ஆம் ஆண்டு முதல் அதிமுகவின் அடிப்படை உறுப்பினரானார். மர்றும் அவரது சொந்த ஊரான எடப்பாடி ஒன்றியம் சிலுவம்பாளையத்தில் கிளைக்கழக செயலாளரானார்.
  • 1985 ஆம் ஆண்டு எடப்பாடி ஒன்றியம் முழுவதும் அம்மா பேரவை துவங்கினார்.
  • 1990 ஆம் ஆண்டு அதிமுக சேலம் வடக்கு மாவட்ட இணை செயலாளரானார்.
  • 1991 ஆம் ஆண்டு சேலம் வடக்கு மாவட்ட செயலாளரானார்.
  • 2006 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் கொள்கை பரப்பு செயலாளராக நியமிக்கப்பட்டார்.
  • 2007 ஆம் ஆண்டு கட்சியின் அமைப்பு செயலாளராக நியமிக்கப்பட்டார்.
  • 2014 ஆம் ஆண்டு கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக்குழு உறுப்பினர், கட்சியின் தலைமை நிலைய செயலாளர் மற்றும் சேலம் புறநகர் மாவட்ட கழக செயலாளரானார்.
  • 2017 ஆம் ஆண்டு, கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர். கட்சியின் தலைமை நிலைய செயலாளர், மற்ற்யும் சேலம் புறநகர் மாவட்ட செயலாளரானார்.
  • எடப்பாடி பழனிசாமி வகித்த பதவிகள்:
  • 1989 ஆம் ஆண்டு ஜெயலலிதாவின் தலைமை ஏற்று எடப்பாடி தொகுதியில் சேவல் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
  • 1991 முதல் 1996 வரை எடப்பாடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர்.
  • 1992 முதல் 1996 வரை சேலம் மாவட்ட திருக்கோயில்களின் வாரியத்தலைவர்
  • 1993 முதல் 1996 சேலம் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்தின் தலைவர்
  • 1998 முதல் 1999 வரை திருச்செங்கோடு நாடாளுமன்ற உறுப்பினர்
  • 2003தமிழ்நாடு சிமெண்ட்ஸ் கார்பரேஷன் தலைவரானார்
  • 2011 ஆம் ஆண்டு முதல் மீண்டும் எடப்பாடி சட்டமன்ற உறுப்பினர்ர் மற்றும் நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர்
  • 2016 முதல் மீண்டும் எடப்பாடி சட்டமன்ற உறுப்பினர், பொதுப்பணித்துறை , நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர்
  • 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி 16 ஆம் தேதி முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார்.
  • அதன் பின்னர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார், எதிர்பார்த்த அளவுக்கு தேர்தலில் வெற்றி கிடைக்கவில்லை என்றால் ஒரு வலுவான எதிர்க்கட்சியாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உருவாகி இருக்கிறது.

அதன் தொடர்ச்சியாக இன்று கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார் - எனவே அடுத்த 5 ஆண்டுகளுக்கு தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமி செயல்பட உள்ளார்.