இலங்கை பெண்ணுக்கு தமிழகத்தில் வாக்குரிமை web
தமிழ்நாடு

இலங்கை பெண்ணுக்கு தமிழகத்தில் வாக்குரிமை.. தேர்தல் ஆணையத்துக்கு அமலாக்கத் துறை புகார்!

இந்தியாவில் சட்டவிரோதமாக குடியேறிய இலங்கை பெண்ணுக்கு, சென்னையில் வாக்குரிமை உள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.

PT WEB

இலங்கை பெண் மேரி பிரான்சிஸ்கா சட்டவிரோதமாக இந்தியாவில் குடியேறி, சென்னை வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளார். அமலாக்கத் துறை தேர்தல் ஆணையத்துக்கு புகார் அளித்துள்ளது. இது தேசிய பாதுகாப்பு பிரச்சனையாக கருதப்படுகிறது. தேர்தல் ஆணையம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

இந்தியாவில் சட்டவிரோதமாக குடியேறிய இலங்கை நாட்டைச் சேர்ந்த பெண்ணிற்கு சென்னையில் வாக்காளர் அட்டை வழங்கப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறை தேர்தல் ஆணையத்துக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளது..

வாக்காளர் பட்டியல்

அமலாக்கத்துறை, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி மற்றும் தேர்தல் ஆணையத்திற்கும் எழுதியுள்ள கடிதத்தில், இலங்கையை சேர்ந்த மேரி பிரான்சிஸ்கா லெட்சுமணன் (Mary Fransiska Letchumanan, 53) என்பவரின் பெயர் இன்னும் விருகம்பாக்கம் சட்டமன்றத் தொகுதியின் பகுதி 111, தொடர் எண் 644 ஆக வாக்காளர் பட்டியலில் உள்ளதாக குறிப்பிட்டுள்ளது. அவருக்கு சாலிகிராமத்தில் உள்ள காவேரி ஹைஸ்கூல் வாக்குச்சாவடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமலாக்கத் துறை மற்றும் தேசிய புலனாய்வு முகமை தகவல்களின் படி, மேரி பிரான்சிஸ்கா 2019ஆம் ஆண்டு இந்தியாவுக்கு சட்டவிரோதமாக குடியேறியவர் என்பதும், அவருக்கு எதிராக ஏற்கனவே NIA மற்றும் Q பிரிவு விசாரணை மேற்கொண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டென்மார்க்கை சேர்ந்த விடுதலைப் புலிகள் தொடர்புடைய ஒருவருக்கு நிதி அனுப்ப முயன்றதாக, NIA அவரை கைது செய்தது. தற்போது அவர் சிறையில் உள்ளார்.

#JUSTIN | வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு

மும்பையில் இருந்து 42.28 கோடி ரூபாய் சட்டவிரோதமாக பெற முயன்றது ED விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. இதன் பேரில், அமலாக்கத்துறை அவருக்கு எதிராக சட்ட விரோத பண பரிமாற்ற தடுப்பு சட்டம் (PMLA) கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது.

அமலாக்கத்துறை அதிகாரிகள் அவருடைய ஆவணங்களை சேகரித்து பரிசோதிக்கும் போது தான், நான்கு ஆண்டுகளுக்கு மேலாக மேரி பிரான்சிஸ்கா வாக்காளர் பட்டியலில் இடம்பெற்று வருவது தெரியவந்துள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணையம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமலாக்கத் துறை கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளது.

நாடு பாதுகாப்பு பிரச்சனைகளுடன் தொடர்புடைய வழக்கில் இருக்கும் இலங்கை நாட்டுப் பெண் இந்திய தேர்தல் பட்டியலில் இடம்பெற்றிருப்பது மிகப்பெரிய தவறாக கருதப்படுகிறது. இது எப்படி நிகழ்ந்தது. யார் உதவியால் வாக்காளர் அட்டை வழங்கப்பட்டது. எந்த அதிகாரிகள் அலட்சியம் செய்தனர் என்கிற விசாரணையை தேர்தல் ஆணையமும், போலீசாரும் விரைவில் விரிவான விசாரணை நடத்தவேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.