Supreme Court - ED - Senthil Balaji  pt web
தமிழ்நாடு

செந்தில்பாலாஜி விவகாரம் - ஒரே நாளில் இரு வழக்குகள்.. உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை வைத்த கோரிக்கை

"வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதியுடன் செந்தில் பாலாஜியை கைது செய்து விசாரணை செய்வதற்கான காலக்கெடு என்பது நிறைவடைகிறது. எனவே, அதற்குள் உச்ச நீதிமன்றம் இந்த மேல்முறையீட்டு மனுக்கள் மீது விசாரணை நடத்தி முடித்து தீர்ப்பு வழங்க வேண்டும்" அமலாக்கத்துறை

அங்கேஷ்வர்

சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் ஜூன் 14ம் தேதி அதிகாலை, அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறையினர் கைது செய்தனர். உடல் நலக்குறைவு காரணமாக அவர், ஓமந்தூரார் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி

அன்றைய தினம் பிற்பகல், மருத்துவமனைக்குச் சென்ற சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி, செந்தில் பாலாஜியை நேரில் பார்வையிட்டு, அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செந்தில் பாலாஜிக்கு, இதய அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது. சிகிச்சை முடிந்த பிறகு ஜூலை 17 ம் தேதி செந்தில்பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

ஜூலை 17 உடன் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் முடிவுக்கு வந்தது. அப்போது காவேரி மருத்துவமனையில் இருந்து காணொளி காட்சி வாயிலாக செந்தில்பாலாஜி ஆஜர் படுத்தப்பட்டார். விசாரணையில் அவருக்கு ஜூலை 26 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டு உத்தரவிடப்பட்டது. தொடர்ந்து காவேரி மருத்துவமனையில் இருந்து புழல் சிறைக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் இரண்டாவது காவல் நீட்டிப்பும் இன்றுடன் முடிவடைந்த நிலையில், புழல் சிறையில் இருந்து காணொலி காட்சி மூலம் செந்தில் பாலாஜி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். ஏற்கனவே இரண்டுமுறை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலிருந்து ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், இன்று முதன் முறையாக புழல் சிறையிலிருந்து ஆஜர்படுத்தப்பட்டார்.

senthilbalaji, ed

தொடர்ந்து, செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஆகஸ்ட் 8 ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார். இதன்மூலம் செந்தில் பாலாஜிக்கு நீதிமன்ற காவல் மூன்றாவது முறையாக நீட்டிக்கபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மறுபுறம் செந்தில் பாலாஜியை கைது செய்தது சட்டபூர்வமானது தான் என சென்னை உயர்நீதிமன்ற மூன்றாவது நீதிபதி வழங்கிய தீர்ப்புக்கு எதிராக செந்தில் பாலாஜி மற்றும் அவரது மனைவி தொடர்ந்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் செந்தில் பாலாஜியின் மனு குறித்து அவர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் இன்று விரிவான வாதங்களை முன் வைத்தார். அப்போது அவர், “நாளை முழுவதும் வாதங்களை முன்வைக்கவும் அனுமதி வேண்டும். மேலும் மேகலா தரப்பில் தொடரப்பட்ட ஆட்கொணர்வு வழக்கிலும் நாங்கள் தனியாக வாதங்களை முன்வைக்க அனுமதிக்க வேண்டும்” என அவர் கோரிக்க வைத்தார்.

அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமலாக்கத்துறை தரப்பு வழக்கறிஞர் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ‘அதற்கு அனுமதிக்க கூடாது’ என்றார். ஆனால் மீண்டும் செந்தில் பாலாஜி தரப்பில், “அந்த விவகாரம் (மேகலா தரப்பு மனு) எங்களது மேல்முறையீட்டு மனுவில் இருந்து முற்றிலும் வேறான ஒரு விவகாரம் என்பதால் அதற்கான அனுமதியை கொடுக்க வேண்டும்” என வலியுறுத்தப்பட்டது.

senthil Balaji-Supreme Court

தொடர்ந்து பேசிய துஷார் மேத்தா, “செந்தில் பாலாஜி தற்பொழுது கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். ஆனால், சட்ட விரோத பண பரிமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒருவர் கைது செய்யப்பட்டு 60 நாட்களுக்குள் விசாரணை அமைப்பு விசாரணை நடத்தி முடித்திருக்க வேண்டும். அந்த வகையில் வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதியுடன் செந்தில் பாலாஜியை கைது செய்து விசாரணை செய்வதற்கான காலக்கெடு என்பது நிறைவடைகிறது.

எனவே, அதற்குள் உச்ச நீதிமன்றம் இந்த மேல்முறையீட்டு மனுக்கள் மீது விசாரணை நடத்தி முடித்து தீர்ப்பு வழங்க வேண்டும்” என கோரிக்கை முன்வைக்கப்பட்டது. மேலும், ஆகஸ்ட் முதல் வாரத்தில் அரசியல் சாசன அமர்வு இருப்பதால் அதற்குள்ளாகவே விசாரணையை நடத்தி முடிக்க வேண்டும் எனவும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.