சட்டவிரோத பணப்பறிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து தனியார் மருத்துவனையில் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட செந்தில்பாலாஜிக்கு அங்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இதனிடையே அவரது மனைவி மேகலா ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்தார். அதன் மீதான விசாரணையில் இரு நீதிபதிகள் அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர். இதனால் ஆட்கொணர்வு மனுவை விசாரிக்க, மூன்றாவது நீதிபதியாக சி.வி.கார்த்திகேயன் நியமிக்கப்பட்டார். மூன்றாவது நீதிபதியின் முன் ஆட்கொணர்வு தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில்பாலாஜி மனைவி மேகலா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் கபில்சிபில் மற்றும் என்.ஆர்.இளங்கோ தங்கள் தரப்பில் பல வாதங்களை முன் வைத்தனர்.
குறிப்பாக, “குற்றம் செய்ததால் கிடைத்த பணத்தை வைத்திருப்பதாகவோ, மறைத்திருப்பதாகவோ ஆதாரம் இல்லை. குற்றம் செய்ததற்கான அனைத்து ஆதாரங்களும் இருந்தால் மட்டுமே கைது செய்ய முடியும். சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணைக்கு அழைத்துச் செல்ல அமலாக்கத்துறைக்கு அதிகாரம் இல்லை.
சட்டவிரோதமாக பணப்பறிமாற்ற தடை சட்டத்தின் 19 ஆவது பிரிவின் படி துணை இயக்குநர்கள், உதவி இயக்குநர்கள் கைது நடவடிக்கை எடுக்கலாம். கைது செய்யப்பட்ட 24 மணி நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அதற்கான ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். ஆனால் இவர்கள், ஆதாரங்களை கொடுக்கவில்லை. அதேபோல் கைதுக்கான காரணங்களை தெரிவிக்க வேண்டும். சட்டவிரோத பணப்பறிமாற்ற தடை சட்டத்தின் படி அமலாக்கத்துறை விசாரணை நடத்த முடியுமே தவிர புலன் விசாரணை மேற்கொள்ள முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஏற்கெனவே இந்த வழக்கில் செந்தில்பாலாஜியின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது” போன்ற வாதங்களை முன் வைத்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கில் இன்று இரண்டாவது நாள் விசாரணை தொடங்கியது.
அப்போது மூத்த வழக்கறிஞர் மேத்தா அமலாக்கத்துறை சார்பாக பல்வேறு வாதங்களை முன் வைத்தார். அதில், “சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் படி புலன் விசாரணை செய்வது அமலாக்கத்துறையின் கடமை. 2,000 ஆண்டுக்கு முன் சட்ட விரோத பணப்பறிமாற்றத்தின் மூலமாக பல நாடுகளில் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது. அதனால் இரு ஒப்பந்தங்கள் உலகளவில் மேற்கொள்ளப்பட்டது. அதில் இந்தியாவும் கையெழுத்திட்டது.
சட்ட விரோத பணிப்பறிமாற்ற தடை சட்டத்தின் கீழ் புலன் விசாரணை செய்வது அமலாக்கத்துறையின் கடமை. குற்றத்தை கண்டுபிடிக்க சட்ட விரோதமாக பரிமாற்றம் செய்யப்பட்ட பணத்தை முடக்குவது, சோதனை செய்வது போன்றவற்றிற்கு அதிகாரம் உள்ளது. காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி மறுப்பது வழக்கை புலன் விசாரணை செய்யும் அமலாக்கத்துறையின் கடமையை மறுப்பதாகும்.
ஆதாரங்களை சேகரிக்கும் அமலாக்கத்துறையின் அனைத்து நடவடிக்கைகளும் புலன் விசாரணை தான். எம்.பி., எம்.எல்.ஏ., சட்டத்தின் வரையறுக்கப்பட்ட குற்றத்திற்கு 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்க வகை செய்யப்பட்டுள்ளது. 2005 ஆம் ஆண்டு இந்த சட்டம் அமலுக்கு வந்த பின் தற்போது வரை 333 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர். விருப்பம் போல் கைது நடவடிக்கைகளில் ஈடுபட முடியாது.
நாங்கள் புலன் விசாரணை செய்ய முடியாது என்ற மனுதாரர் தரப்பு வாதங்களை ஏற்றுக்கொண்டால் எம்.பி., எம்.எல்.ஏ., க்களின் வழக்குகளில் சொத்துகளை முடக்கம் செய்ய மட்டுமே முடியும். வங்கி மோசடிகளில் ஈடுபட்ட 19 ஆயிரம் கோடி ரூபாய் அமலாக்கத்துறை வழக்குகளால் மீட்டு அளிக்கப்பட்டுள்ளது” என்பன போன்ற வாதங்கள் வைக்கப்பட்ன.