தமிழ்நாடு

கனமழை எதிரொலி: வேதாரண்யம் பகுதியில் உப்பு உற்பத்தி பாதிப்பு

kaleelrahman

வேதாரண்யம் பகுதியில் கடந்த 2 தினங்களாக பெய்து வரும் மழையால் உப்பளத்தில் தண்ணீர் தேங்கி உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு, கடினல்வயல் உள்ளிட்ட பகுதியில் மூவாயிரம் ஏக்கரில் சாப்பாட்டு உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிலையில், கடந்த ஒரு மாதமாக கடும் வெப்பம் நிலவியதால் அதிக அளவில் உப்பு உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.

இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக மேலடுக்கு சுழற்சி காரணமாக பெய்து வரும் மழையால் வேதாரண்யம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள உப்பளங்கள் முழுவதும் நீரில் முழ்கி உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது

ஒரு ஏக்கர் உப்பள பாத்திகளில் தரிசுப் பணிகள் மேற்கொண்டு சீரமைக்க ரூ 20 ஆயிரம் வரை செலவு ஆன நிலையில் மழையால் உப்பளங்கள் சேறும் சகதியுமாக உள்ளது. அரசின் தடை காரணமாக உப்பள பாத்திகளில் பயன்படுத்த புழுதி மணலை கொண்டு செல்வதற்கும் வழி இல்லாமல் உள்ளது.

உப்பளப் பாத்திகள் சீரமைக்கப்பட்டு ஒரு மாதத்திற்கு பிறகு தான் மீண்டும் உப்பு உற்பத்தி செய்ய முடியும். இந்த நிலையில் உப்பளத் தொழிலை நம்பியுள்ள 20 ஆயிரம் உப்பளத் தொழிலாளர்கள் வேலையிழந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளனர்.