தமிழ்நாடு

இரட்டை இலை இழுபறி... 22ஆம் தேதி முடிவுக்கு வருமா?

இரட்டை இலை இழுபறி... 22ஆம் தேதி முடிவுக்கு வருமா?

webteam

ஆர்.கே.நகர் தேர்தலில் இரட்டை இலை சின்னம் ஒதுக்குவது குறித்து அதிமுகவின் இரு அணிகளும் 22ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுகவின் பொதுச்செயலாளராக சசிகலாவை நியமித்தது செல்லாது என ஓ.பி.எஸ் அணியினர் தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்தனர். இது தொடர்பாக சசிகலா பதிலளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. அதற்கு அதிமுகவின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விளக்கம் கடிதம் அனுப்பினார். அதை நிராகரித்த தேர்தல் ஆணையம் பெங்களூர் சிறையில் உள்ள சசிகலாவுக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்பியது. பின்னர் சசிகலா கடிதம் அனுப்பினார். அதனைத் தொடர்ந்து ஓபிஎஸ் அணியினர் மீண்டும் தேர்தல் ஆணையத்திடம் தங்கள் தரப்பு விளக்கத்தை அளித்தனர்.

இந்த நிலையில் சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் 12 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அதிமுக சார்பில் அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் மதுசூதனன் போட்டியிடுகிறார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடப் போவதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்திருந்தார்.

சசிகலா தரப்பில் தம்பிதுரை தலைமையில் 10 பேர் அடங்கிய குழு இந்திய தலைமை தேர்தல் ஆணையரை நேற்று சந்தித்து மனு அளித்தனர். அதில் சசிகலா நியமன விவகாரத்தில் அனைத்து விதிகளும் முறையாக பின்பற்றப்பட்டுள்ளன கூறியுள்ளனர். இரட்டை இலைச் சின்னத்தில்தான் போட்டி என டிடிவி தினகரனும் கூறினார்.

அதேசமயம் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் தாங்கள்தான் போட்டியிடுவோம் என ஓபிஎஸ் அணியினர் கூறி வருகின்றனர். இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடமும் அவர்கள் ஒதுக்கும்படி வலியுறுத்தியுள்ளனர்.

சின்னம் ஒதுக்குவது குறித்து சசிகலா மார்ச் 20 ஆம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், சின்னம் தொடர்பாக அதிமுகவின் இரு அணியினரையும் நேரில் விசாரிக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இதையடுத்து வரும் 22 ஆம் தேதி காலை 10.30 மணிக்கு சசிகலா, ஓபிஎஸ் தரப்பினர் நேரில் ஆஜராக வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.