விஜய் X
தமிழ்நாடு

தருமபுரி | விஜய் நாளை பரப்புரை.. 13 நிபந்தனைகளுடன் அனுமதி!

தருமபுரியில் நாளை நடைபெறவுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயின் தேர்தல் பரப்புரைக்கு, 13 நிபந்தனைகளுடன் தேர்தல் நடத்தும் அலுவலர் அனுமதி வழங்கியுள்ளார்.

PT WEB

தருமபுரி மாவட்டத்தில் சட்டமன்றத் தேர்தலில் தவெக சார்பில் போட்டியிடும் தருமபுரி, பாப்பிரெட்டிப்பட்டி, பென்னாகரம், பாலக்கோடு, அரூர் (தனி) ஆகிய ஐந்து தொகுதி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க தவெக தலைவர் விஜய் நாளை 14ஆம் தேதி பரப்புரை செய்கிறார். இதற்காக தருமபுரி பென்னாகரம் சாலையில் உள்ள தனியார் இடத்தில் தவெகவினர் அனுமதி கோரியிருந்தனர். இந்த நிலையில் தருமபுரி தேர்தல் நடத்தும் அலுவலர் ஆர்.காயத்ரி, தவெக தலைவர் விஜய் பரப்புரை செய்வதற்கு 13 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளார்.

விஜய்

இதில் தனியாருக்குச் சொந்தமான இடத்தில் காலை 11:00 மணி முதல் மாலை 5 மணி வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் அந்தப் பகுதியில் வைக்கப்படும் பேனர், ஒலிபெருக்கிகள், கட்சிக் கொடிகள், தடுப்புகள் உள்ளிட்டவை தேர்தல் செலவுக் கணக்கில் சேர்க்கப்படும். பொதுமக்கள் அதிகம் கூடும் இடம் என்பதால், பாதுகாப்பிற்காக உரிய கட்டணத்தைச் செலுத்தி தீயணைப்பு ஊர்தியை அழைத்துக்கொள்ள வேண்டும். அதேபோல் அதிகளவில் மின் கம்பிகள் இருப்பதால் ட்ரோன்கள் பறக்க விடும்போது கவனமாக பறக்கவிட வேண்டும். அனுமதி வழங்கப்பட்ட இடம், குறித்த நேரத்தில் பரப்புரையை முடித்துக் கொள்ள வேண்டும். சாதி, மதப் பிரச்னைகள் ஏற்படும் வகையில் இருக்கக்கூடாது. எஸ்.எம்.எஸ் மூலமாக தேர்தல் பரப்புரை செய்யக்கூடாது என்பன உள்ளிட்ட 13 வகையான நிபந்தனைகளை விதித்து அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தவெக தரப்பில் பகல் 12 மணியிலிருந்து இரவு பத்து மணி வரை அனுமதி கோரப்பட்டு இருந்த நிலையில், காலை 11 மணியிலிருந்து மாலை 5 மணி வரை தேர்தல் நடத்தும் அலுவலர் அனுமதி வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.