இந்திய தேர்தல் ஆணையம் மூன்றாம் கட்ட சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை (SIR) தெலங்கானா, பஞ்சாப், கர்நாடகா உள்ளிட்ட 16 மாநிலங்கள் மற்றும் சண்டிகர், புதுடெல்லி, தாத்ரா நகர் ஹவேலி-டாமன் தியூ ஆகிய 3 யூனியன் பிரதேசங்களில் மே 30 முதல் தொடங்குகிறது.
பிகாரில் கடந்த 2025-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக, ஜூன் 24ம் தேதி வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை (எஸ்.ஐ.ஆர்) இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. இப்பணிகளின் முடிவில், ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் வாக்களர் அட்டைகளை பெற்றிருந்தவர்கள் மற்றும் இறந்தவர்கள், வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்தவர்கள் என 65 லட்சத்திற்கு மேற்பட்ட வாக்களர்கள் அம்மாநிலத்தில் நீக்கப்பட்டனர். இது, இந்திய அளவில் பேசுபொருளான நிலையில், காங்கிரஸ் உள்ளிட்ட இண்டியா கூட்டணி கட்சிகள் எஸ்.ஐ.ஆர்.க்கு எதிராக போராட்டங்களை நடத்தி வந்தன.
இதற்கிடையில், இரண்டாம் கட்டமாக தமிழ்நாடு, கேரளா, உத்திர பிரதேசம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான எஸ்.ஐ.ஆர். அறிவிப்பை கடந்த ஆண்டு அக்டோபர் 27-அன்று அறிவிப்பை வெளியிட்டு பணிகளைத் தொடங்கியது. எஸ்.ஐ.ஆர்-க்கு முன்பாக 50.99 கோடி வாக்களர்கல் இந்த மாநிலங்களில் இருந்த நிலையில், எஸ்.ஐ.ஆர்-க்குப் பின் 5.18 கோடி வாக்களர்கள் 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நீக்கப்பட்டிருந்தனர். இதில், அதிகபட்சமாக, உத்தரபிரதேசத்தில் 2.04 கோடி வாக்களர்களும், மேற்கு வங்கத்தில் 83.86 லட்சம் வாக்களர்களும் நீக்கப்பட்டிருந்தனர்.
இந்தசூழலில் தான், மூன்றாம் கட்ட எஸ்.ஐ.ஆர் அறிவிப்பை தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டுள்ளது. இதில், தெலங்கானா, பஞ்சாப், மேகாலயா, நாகலாந்து, மணிப்பூர், உத்தரகண்ட், சிக்கிம், ஒடிசா, திரிபுரா, மகாராஷ்டிரம், ஜார்கண்ட், ஆந்திரப்பிரதேசம், அருணாச்சல பிரதேசம், மிசோரம், ஹரியானா, கர்நாடகா உள்ளிட்ட 16 மாநிலங்களிலும், சண்டிகர், புதுடெல்லி, தாத்ரா நகர் ஹவேலி மற்றும் டாமன் - தியூ உள்ளிட்ட 3 யூனியன் பிரதேசங்களிலும் வரும் மே-30ம் தேதி முதல் எஸ்.ஐ.ஆர். பணிகள் தொடங்கும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்த மாநிலங்களில், 36.73 கோடி வாக்களர்கள் உள்ள நிலையில், 3.94 லட்சம் பிஎல்ஓ-க்கள் எஸ்.ஐ.ஆர். பணிகளில் ஈடுபடவுள்ளனர். இவர்களுக்கு ஜூன் மாதம் 20 - 29 வரை பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இதையடுத்து, ஜூன் 30-ம் தேதி முதல் ஜூலை 29-ம் தேதி வரை வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகள் நடைபெறவுள்ளன.
எனினும், ஹிமாச்சல பிரதேச மாநிலத்திலும், ஜம்மு-காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்களில் தட்பவெப்ப சூழ்நிலை காரணமாக எஸ்.ஐ.ஆர் அறிவிப்பு வெளியிடப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேசமயம், இந்த மாநிலங்களுக்கும் விரைவில் எஸ்.ஐ.ஆர். அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.