தமிழ்நாடு

அன்று அதிமுக... நேற்று அமமுக... இன்று திமுக...: தங்கதமிழ்ச்செல்வனின் அரசியல் பின்னணி

அன்று அதிமுக... நேற்று அமமுக... இன்று திமுக...: தங்கதமிழ்ச்செல்வனின் அரசியல் பின்னணி

webteam

அதிமுக, அமமுக ஆகிய கட்சிகளில் இருந்துவந்த தங்கதமிழ்ச்செல்வன் தற்போது திமுகவில் இணைந்துள்ளார். அவரது அரசியல் பின்னணி என்ன என்பதை பார்க்கலாம்.

தேனி மாவட்டம் நாராயணத்தேவன் பட்டியை சேர்ந்த தங்க தமிழ்ச்செல்வன் எம் ஏ படித்தவர். 1996ஆம் ஆண்டில் அதிமுகவின் தேனி மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளராக கட்சிப் பணியைத் தொடங்கினார். 2000ஆம் ஆண்டில் அதிமுக மாநில மாணவர் அணிச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. தங்க தமிழ்ச்செல்வனுக்கு முதன்முறையாக 2001ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு கிடைத்தது. ஆண்டிபட்டி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 

அப்போது ஜெயலலிதா மீது டான்சி ஊழல் வழக்கு நிலுவையில் இருந்ததால், அவரால் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை இருந்தது. பின்னர் அவர் தேர்தலில் நிற்க தடை நீங்கியதைத் தொடர்ந்து ஆண்டிபட்டியில் போட்டியிட முடிவு செய்தார். இதையடுத்து தங்க தமிழ்ச்செல்வன் தனது பதவியை ராஜினாமா செய்து ஜெயலலிதா போட்டியிட வழி ஏற்படுத்திக் கொடுத்தார். இதன் மூலம் ஜெயலலிதாவிடம் அவருக்கு நல்ல பெயர் கிடைத்தது. இதற்குப் பிரதி உபகாரமாக, 2002ம் ஆண்டு நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலில் தங்க தமிழ்ச்செல்வனுக்கு வாய்ப்புக் கொடுத்து அவரை எம்.பியாக்கினார் ஜெயலலிதா. 

2009 மக்களவைத் தேர்தலில் தேனி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இந்த சூழலில் 2011ஆம் ஆண்டு மீண்டும் ஆண்டிபட்டி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2016ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் தங்க தமிழ்ச்செல்வனுக்கு அதே தொகுதியில் வாய்ப்பளிக்கப்பட்டு வெற்றி பெற்றார். இதற்கிடையே ஜெயலலிதா மரணத்தை தொடர்ந்து கட்சியில் பிளவு ஏற்பட்டது. அப்போது சசிகலா தலைமையிலான அணிக்கு ஆதரவளித்தார் தங்க தமிழ்ச்செல்வன். பின்னர் டிடிவி தினகரன் அணியின் போர் தளபதிகளுள் ஒருவராக மாறினார்.

கடந்த ஆண்டு தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களில் தங்க தமிழ்ச்செல்வனும் ஒருவர். டிடிவியின் அமமுகவில் கொள்கை பரப்புச் செயலாளர், தேனி மாவட்டச் செயலாளர், மதுரை, தேனி மண்டல தேர்தல் பொறுப்பாளர் என கட்சியில் பல முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டன. சமீபத்தில் நடந்த மக்களவை தேர்தலில் துணை முதல்வர் ஓபிஎஸ்ஸின் மகன் ரவீந்தரநாத் குமாரை எதிர்த்து தேனி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். 

இந்தச் சூழலில் டிடிவி தினகரனை கடுமையாக விமர்சித்து தங்க தமிழ்ச்செல்வன் பேசிய ஆடியோ சில தினங்களுக்கு முன்பு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து டிடிவி தினகரனுக்கும் தங்க தமிழ்ச்செல்வனுக்கும் இடையே வார்த்தை மோதல் மூள, அவர் கட்சியில் இருந்து நீக்கப்படுவார் என டிடிவி தினகரன் அறிவித்தார். தான் இனி அமைதியாக இருக்கப் போவதாகவும் எந்தக் கட்சியிலும் இணையப் போவதில்லை என்றும் கூறிய தங்க தமிழ்ச்செல்வன், தற்போது திமுகவில் இணைந்துள்ளார்.