தமிழ்நாடு

சென்னையில் காற்று மாசு அளவு குறைவு

சென்னையில் காற்று மாசு அளவு குறைவு

Rasus

போகிப் பண்டிகையை இன்று வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. இன்றைய நாளில் சென்னையில் காற்றின் மாசு கடந்த ஆண்டைவிட குறைந்து இருந்ததாக தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் தெரிவித்துள்ளது.

பொங்கல் பண்டிகைக்கு முதல்நாள் போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது. பழையன கழிதலும், புதியன புகுதலும் என்பதற்கு ஏற்ப, பழைய பொருட்களை போகிப் பண்டிகையில் மக்கள் தீயிட்டு கொளுத்து வழக்கம்.

இந்நிலையில் மக்கள் பழைய பொருட்களை எரித்தாலும், சென்னையின் காற்றின் மாசு கடந்த ஆண்டை விட குறைவாக இருந்ததாக தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் தெரிவித்துள்ளது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 இடங்களில் போகிக்கு முன்பும், போகி தினத்திலும் காற்றின் தர ஆய்வை மாசு கட்டுப்பாடு வாரியம் மேற்கொண்டது.

இந்த ஆய்வின்படி, காற்றில் கந்தக டை ஆக்சைடு, நைட்ரஜன் ஆக்சைடு வாயுக்களின் அளவு அனுமதிக்கப்பட்ட தர அளவை விடக் குறைவாக இருப்பது தெரியவந்துள்ளது. காற்றில் நுண்துகள்களின் அளவு 8 மண்டலங்களில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு போகி தினத்தன்று 7 சதவிகிதம் குறைவாக இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

இதனிடையே, காற்று மாசு குறித்து விழிப்புணர்வு பரப்புரை செய்ததால், அதன் பலனாக காற்றில் மாசு அளவு இந்த ஆண்டு குறைந்துள்ளதாக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.