தமிழ்நாடு

மாநில மகளிர் அணி முதல் இளைஞர் அணி வரை... திமுக-வில் யார் யார் என்னென்ன பொறுப்பில் நியமனம்?

webteam

திமுகவின் மாநில இளைஞரணி செயலாளராக மீண்டும் உதயநிதி ஸ்டாலினை நியமித்து அறிவித்துள்ளார், திமுகவின் பொதுச்செயலாளரான துரைமுருகன்.

திமுகவில் மாநில இளைஞர் அணி, மாநில மகளிர் அணி, பிரசாரக்குழு செயலாளர்கள், சமூக வலைதள பொறுப்பாளர்கள், ஆலோசனைக்குழு பதவிகளுக்கு புதிய நிர்வாகிகளை நியமித்து திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதன்படி, திமுக இளைஞரணி அணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் மீண்டும் நியமிக்கப்பட்டிருக்கிறார். 2019ஆம் ஆண்டு ஜூலை 4ஆம் தேதி, முதல் முறையாக திமுகவின் இளைஞரணி செயலாளரான உதயநிதி, தற்போது 2ஆவது முறையாக தேர்வாகியுள்ளார்.

இதே போல் திமுகவின் இளைஞரணியின் துணைச்செயலாளர்களாக எஸ்.ஜோயல், ந.ரகுபதி, இளையராஜா, ப.அப்துல் மாலிக், கே.இ.பிரகாஷ், க.பிரபு, பி.எஸ்.சீனிவாசன், கு.பி.ராஜா, சி.ஆனந்தகுமார் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், திமுக மகளிரணி செயலாளராக ஹெலன் டேவிட்சன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மகளிரணி செயலாளராக இருந்த கனிமொழி, துணைப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டதால், இப்போது மகளிரணி செயலாளர் பதவிக்கு ஹெலன் டேவிட்சனை நியமனம் செய்து பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

திமுக மகளிர் அணித் தலைவராக விஜயா தாயன்பன், மகளிரணி செயலாளராக ஹெலன் டேவிட்சன், மகளிர் அணி இணை செயலாளராக குமரி விஜயகுமார், மகளிர் அணி துணை செயலாளர்களாக பவானி ராஜேந்திரன், கயல்விழி செல்வராஜ் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இதேபோல், திமுக மகளிர் தொண்டர் அணி செயலாளராக நாமக்கல் ப.ராணி, மகளிர் அணி ஆலோசனை குழுவில் சிம்லா முத்துச்சோழன் ஆகியோரும், மகளிர் அணி பிரச்சாரக் குழு செயலாளர் மகளிர் அணி சமூக வலைதள பொறுப்பாளர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.